Thursday, December 14, 2006

மரணத்துள் வாழ்தல் - யாழ்ப்பாண நாட்குறிப்புகள்

-முரண்வெளி கூட்டுக்கட்டுரை-



‘எமனைக் கருவேந்தி மருளும் காற்றோடும்
எங்கள் அன்னையர் வயிற்று அக்கினி பெருக்கும்
தணலோடும்
கோடை வந்திறங்கிற்றெம் மண்மீது
மறுபடியும்
-தவ.சஜிதரன்-

‘Corpses have grown
And covered the land….’

‘Earth echoes with alien sounds
Stuttering riffles, weird moans –
And the harsh face of war
Fills the land with abomination’
-Ken Saro Wiwa, Songs in a time of war-


*
மல்ட்டி பரல் குண்டுகள் ஏவப்படும் சத்தத்தில் வீட்டுச் சுற்றுப் புறம் பலமாக அதிர்ந்து கொண்டிருக்கிறது. இன்றைய ஷெல் சத்த மும்முரத்தைப் பார்த்தால் பிரிட்டோன் போட்டுத்தான் தூங்க வேண்டியிருக்கும் போலிருக்கிறது. இன்றைய நாளின் உள்வாங்கல்களை அலசியபடி அவற்றை கணினியில் பதிவு செய்து கொண்டிருகிறோம், கரண்ட் நின்று விட்டால் டைப் செய்ய முடியாது, தமிழில் டைப் செய்வதென்றால் நாம் அந்த இடத்திலிருந்து விலகி விடவே விரும்புவோம், பௌசரது வேண்டுகோளைப் புறக்கணிக்கவும் முடியாது. விவாதித்து திருத்தங்களையும் சேர்ப்புகளையும் செய்வதற்கு நேரம் கிடையாது. ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு வேலைப் பளு. சிதறல்களாய் எழுதியிருந்தவற்றை மீள்-ஒழுங்கு செய்ய வேண்டும். அது ஒரு நீண்ட தலைவலியைக் கொடுக்கும் வேலை. இன்று பத்து மணியளவில் தான் நண்பரொருவர் ஃபோன் செய்து வவுனியாவில் 5மாணவர்கள் கதறக் கதறச் சுட்டுக் கொல்லப்பட்ட நிகழ்வை நடுங்கும் குரலுடனும் விபரித்தார். பதிலளித்த தோழரின் பதில் இவ்வாறு அமைந்தது 'ஆ, அப்பிடியே நாங்கள் இன்னும் நியுhஸ் கேக்கேல்ல.. எத்தினை மணிக்கி நடந்தது?” ஃபோனில் கதைத்த நண்பர் அதிர்ந்து போனாராம். உடைந்த கம்மிய அவரது குரலுக்குப் பதிலாக தோழரது சலிப்புக் கூடிய கவலையற்ற குரலும் பதட்டமின்மையும் சங்கடத்தை ஏற்படுத்தியிருக்கக் கூடும். என்ன செய்வது இதெல்லாம் கொடூரம் என்ற நிலையிலிருந்து சாதாரண நிகழ்வுகளாக மாறி நாட்களாகின்றன என்பதை எப்படி விளங்கும் வகையில் கூறுவது?
---
ஓகஸ்ட் 11ம் திகதி வெள்ளிக்கிழமை பின்னேரம் நாங்கள் நல்லூர் ஆலயச் சூழலில் உள்ள உணவு விடுதி ஒன்றில் இருந்தோம். நல்லூர் திருவிழா என்பதால் அச்சூழலில் பெரிதும் அச்சமின்றித் திரியலாம் என்கிற நிலை காணப்பட்டது. பல நாட்கள் வீடுகளுக்குள்ளேயே அடைபட்டுக் கிடக்க வேண்டி இருந்த பலருக்கு நல்லூரின் மாலைப்பொழுதுகள் அரிய சந்தர்ப்பமாக இருந்தன. 6.30 மணியளவிலேயே ஷெல் சத்தங்கள் கேட்கத் தொடங்கியிருந்தன. கிளைமோர்களும், கிரனேட்டுகளும் சர்வ சாதரணமாகி விட்டதால் பலரும் ஆரம்பத்தில் ஷெல் சத்தத்தை கிளைமோர் அல்லது கிரனேட் தாக்குதல் அருகில் எங்கேயோ நடந்ததாய் கூறிச் சமாதானப் பட்டுக்கொண்டார்கள். சண்டை தொடங்கி விட்டது என்பதை நம்ப யாருமே தயாராயிருக்கவில்லை. நல்லூர் முடியும் வரைக்கும் எவனும் எதுவும் செய்யமாட்டாங்கள் என்ற அசட்டு நம்பிக்கை மக்கள் மனதில் பெருமளவில் இருந்தது. அதைவிட, மறுநாள் சனிக்கிழமை புலமைப் பரிசில் பரீட்சை நடக்க ஏற்பாடாகியிருந்தது. கல்விச்செயற்பாடுகளைக் குழப்புவதில் இருதரப்புமே ஏற்கனவே தேவையானளவு கெட்ட பேரைச் சம்பாதித்திருந்தன. ஆகவே புலமைப் பரிசிலுக்கு இடையுhறு விளைவிக்க இருதரப்புமே -முக்கியமாக விடுதலைப் புலிகள்- விரும்பார்கள் என்றொரு நம்பிக்கையும் மக்கள் மத்தியில் இருந்தது.
ஷெல் சத்தங்களும், ஹெலிகளின் தொடர் உலாவுகையும் போர் தொடங்கிவிட்டதை உறுதி செய்தன. அனைவரும் அச்சத்துடன் எதிர்பார்த்திருந்த யுத்தம் இறுதியாகத் தொடங்கி விட்டது என்பதை மிகச் சோர்வுடன் மெல்ல மெல்ல உணர்ந்தோம். அன்றிரவு மின்சாரம் சிறுது நேரத்திடன் நின்றுவிட்டது. கைத்தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டிருந்தன. யாரும் யாருடனும் தொடர்புற முடியாத நிலை தோன்றியிருந்தது. தனியார் பண்பலை வானொலிகள் இயங்கவில்லை. பொய்யைத் தவிர வேறெதுவும் சொல்லியறியாத இலங்கை வானொலியின் யாழ்சேவை மாத்திரம் 'மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஊரடங்கு அமுல்படுத்தப் பட்டிருப்பதாக' யாழ் படைத் தலமையகத்தின் அறிக்கையை மேற்கோள் காட்டி 15 நிமிடங்களுக்கு ஒரு தடவை அலறிக் கொண்டிருந்தது.
யாருமே தயாராயிருக்கவில்லை. மண்ணெண்ணையோ மெழுகுதிரிகளோ பற்றறிகளோ அற்ற நிலையில் அன்றைய இரவு இருளில் கழி;ந்தது. அயலில் வாடகைக்கு அறை எடுத்து தங்கியிருந்த வெளிமாவட்டத்தைச் சேர்ந்த பல்கலைக் கழக மாணவர்கள் மிகவும் பயந்து போயிருந்தனர். எல்லோரும் ஒன்றாக முன்முற்றத்து பெஞ்சுகளில் கூடியிருந்து கதைத்தவாறேயிருந்தோம். யாருமே உறங்குவதற்ற்குத் தயாராயிருக்கவில்லை. தாம் எப்படி உயிரோடு வீடு போய்ச்சேருவது என்பது அவர்களுடைய பெருங்கேள்வியாக இருந்தது.
மறுநாள் காலையும் ஊரடங்கு தளார்த்தப் படவில்லை. மின்சாரம் இல்லாததால் தண்ணீர்த் தாங்கிகளில் நீர் நிரப்பிக் கொள்ள முடியவில்லை. குளிப்பதற்காக கிணற்றடிகளில் லைன் போடவேண்டியிருந்தது. யாழ்ப்பாணத்தில் பல இடங்கள் பங்குக் கிணறுகள் தான். கிணற்றடிச் சண்டைகள் பெரிய பிரச்சனையாக மாறிவிட்டன. பல்கலைக் கழக மாணவர்களுக்கு உணவு ஒரு பெரிய பிரச்சனையாக இருக்கப் போகிறது. ஒன்பது மணியளவில் இராணுவப்பிரசன்னம் அற்ற உள்வீதிக் கடைகளில் ஒற்றைக்கதவு-வியாபாரம் நடப்பதாக செய்தியறிந்து எல்லோரும் ஆளுக்கொரு பைகளை எடுத்துக்கொண்டு கடைகளை நோக்கி படையெடுத்தோம். மெழுகுதிரி, அரிசி, பால்மா, சீனி, பருப்பு, சோயாமீற் போன்ற பொருட்கள் சற்று விலை கூட்டப்பட்டு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் விற்கப்பட்டன. பல்கலைக் கழக மாணவர்களது கைகளில் நிறைய நூடில்ஸ் பாக்கெட்டுகளையும் சமபோஷ பாக்கட்டுகளையும் கண்டேன். சமபோஷவுடன் தண்ணீரை முண்டி விழுங்குவதாக அவர்கள் கூறியபோது என்னவோ செய்தது.
அடுத்தடுத்த நாட்களில் ஊரடங்கு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தளர்த்தப் பட்டிருப்பதாய் யாழ் சேவை அறிவித்ததும் வீடுகள் வெறிச்சோடின. அத்தியாவசிய பொருட்களை வாங்கி சேகரம் பண்ணி விட வேண்டுமென்கிற அந்தரம் மக்களை சிடுமூஞ்சிகளாகவும் சண்டைக்காரர்களாகவும் மாற்றி விட்டிருந்தது. அனைவரினதும் கால்களில் சக்கரங்கள் முளைத்திருந்தன. பனடோல் கார்ட்டுகள், மா, சீனி பருப்பு எனப் பொருட்களை வாங்கிக் குவிப்பதற்கு மத்திய தர வர்க்கத்துக்கு இயலுமாயிருந்தது. எங்கு பார்த்தாலும் கியுh. மீண்டும் கியுh வாழ்க்கை எம்மீது திணிக்கப் பட்டிருப்பதை வெறுப்புடன் உணரவேண்டியிருந்தது. கம்பி வழித் தொலைபேசி இணைப்புகள் ஓரளவுக்கு சீர் செய்யப் பட்டதும், தொலைபேசி அழைப்புகளை எற்படுத்துவதும் பெற்றுக்கொள்வதற்கும் மக்கள் பட்ட பாடு சொல்லி மாளாது. 'உங்கட பக்கம் எப்பிடி?” விசாரிப்புகளுக்கு மேலாக தவறிப்போய் வன்னியிலும் வவுனியாவிலும் கொழும்பிலும் சிக்கிக் கொண்ட உறவினர்களுக்கு தொலைபேசி செய்வதற்கு அரும்பாடு படவேண்டியிருந்தது.
எனது அயலவர்களில் ஒருவரது அப்பா கிளிநொச்சிக்கு சென்றிருந்தார். அக்குடும்பத்தினர் 2001 யுத்ததில் தென்மராட்சிப் பக்கமிருந்து துரத்தப் பட்டு இங்கு வந்து குடியேறி, பின்னர் கல்வித் தேவைகளுக்காக தங்கிவிட்டவர்கள். தகப்பனும் மகளும் மாத்திரம் தான். தாயார் 90களின் ஷெல் வீச்சு ஒன்றில் கொல்லப் பட்டிருந்தார். தந்தையார் திடீரென ஏ-9 மூடப்பட்டதால் யாழ் திரும்பமுடியாத நிலையிலிருந்தார். அவரது மகள் அவ்வீட்டில் தனியாக இருந்தார். முதல் ஊரடங்கு இரவின் போது அந்தப் பெண் எங்கள் வீட்டில் தான் தங்கியிருந்தார். தனது தந்தை எவ்வாறெல்லாம் கஷ்டப்படக்கூடும் என்பது பற்றிய மிகக் கொடூரமான ஊகங்களை வெளியிட்டுக்கொண்டிருந்தார். அவருடைய தந்தை நீரிழிவு நோயால் அவதிப் படுபவராம். ஆஸ்த்துமா வேறாம். ‘ஒவ்வொரு நாளும் 7 குளிசைகள் இன்றி உயிர்வாழ முடியாதவர், எப்படி றெயினிங் எடுக்கப் போப்போறாரோ தெரியேல்லை……………………. (தணிக்கை). அவரை எங்களுடன் வந்து விடும்படி கூற அம்மா தயாராயிருக்கவில்லை. 'தேத்தண்ணிக்கு மா இல்லை, புட்டுக்கு மாவில்லை” என்கிற கணக்கில் சாக்குக் கூறினாள். அடுத்த நாள் இரவு அம்மா பிளாஸ்க்கினுள் தேனீரும் உணவுப் பொதியுடனும் அவ்வீடு சென்று தங்கி விடியற்காலமை வந்து முழுகினாள். அடுத்தடுத இரவுகளில் வேறு சில அயல் பெண்கள் உணவுப் பார்சலுடனும் பிளாஸ்குடனும் அங்கு சென்று வந்து கொண்டிருந்தனர். பிளாஸ்குகளுக்கான காரணம் அம்மா முழுகுவதில் தெரிந்தது. மிகவும் அசிங்கமாய் உணர்ந்தேன். (சாதி தெரியாது, கதையைப் பாத்தா எங்கட ஆள் மாரித்தான் தெரியுது, நல்ல பெட்டை ஆனா எத்தினையாம் செம்போ எங்கெங்க கலப்போ ஆர் கண்டது? இந்த நேரம் கேக்கவும் ஏலா..)
யாழ்ப்பாணத்தின் சாதி அமைப்பின் கோர முகத்தையும் மத்தியதர முதலாளித்துவ மனப்பாங்கையும் நான் இன்னொருமுறை கண்டு அதிர நேர்ந்தது பல்கலைக் கழகத்தில். அவர் விரிவுரையாளர். அனுபவமுள்ளவர். பலவழிகளிலும் மார்க்ஸிஸ்ட்டாக தன்னைப் பாவனை பண்ணிக் கொள்ள முனைபவர். அவர் கூறினார் 'இந்த என்.ஜி.ஓ அறுவாங்களால தான் தங்கச்சி இவ்வளாவும்.., இவங்கள் வேணுமெண்டே செயற்கைத் தட்டுப் பாட்டை எங்களுக்கு ஏற்படுத்தியிருக்கிறாங்கள். அகதிச் சனத்துக்கு தேவைப்படுமெண்டு எல்லா அத்தியாவசியப் பொருட்களையும் அவங்கள் கொள்வனவு செய்ததால தான் எங்களுக்கு இந்தக் கெதி.” (நாம் இங்கு என்,ஜி.ஓவினை நியாயப்படுத்தவில்லை, ஆனால் அவை இல்லாவிடின் பாதிக்கப்பட்ட மக்களின் நிலை இன்னும் மோசமாகவிருந்திருக்கும். ஆனால் விரிவுரையாளர்களும் உயர்பதவிகளுலிருப்போரும் தமது சுருட்டிக் கட்டி எடுத்த பண வலுவினைப் பயன் படுத்தி இன்னும் நன்றாய் குளிர்காய முடிந்திருக்கும்.) உயர் பதவிகளில் இருப்போரில் ஒரு சில விதி விலக்குகளைத் தவிர அனைவருக்கும் இக்காலப் பகுதி ஓர் சிறந்த விடுமுறையாகக் கழிந்து கொண்டிருக்கிறது. அத்தியாவசியப் பொருட்களுக்கான தட்டுப்பாடு வடக்கில் நிலவவில்லை என்று தனது முட்டாள்தனமான பொய்யை திரும்பத் திரும்பக் கூறிக்கொண்டிருக்கும் அரசை விட அபாயகரமான நபர்கள் இவர்கள். இந்த நபர்களுக்காகத் தான், யாழ் மின்சார சபை கிரிக்கெட் மச் நேரங்களில் மின் வழங்கி உதவி செய்தது, பரீட்சை எதிர் நோக்கும் ஏழை மாணவர்களின் நிலை பற்றிக் கவலைகள் ஏதுமற்று.... (ஆதாரம்: உதயன் பத்திரிக்கை செய்தியும் ஊர்ஜிதப்படுத்தப்படாத தகவல் ஒன்றும்)
ஊரடங்கு மட்டுப்படுத்தப் பட்ட அளவில் தளர்த்தப் பட்ட போது 15-40 வயதுக்குழுமத்து ஆண்கள் தவிர்ந்த அனைவரும் கியுhக்களில் நின்றனர். மா கையிருப்புத் தீர்ந்து போன குடும்பங்களில் பெரிய இடர் நிலவியது. பல குழந்தைகளாலும் சிறுவர்களாலும் திணிக்கப் படும் புதிய சூழ் நிலையை சீரணிக்க முடியவில்லை. அவர்கள் தொடர்ந்து அழுது கொண்டுதானிருக்கின்றனர். ஏன், எதுக்காக என்ற அவர்களது கேள்விகளுக்கு எந்த ஒரு அரசியல் தலமையாலும் பதிலிறுக்க முடியுமென நான் நம்பவில்லை. எனது வீட்டிலும் ஏழு கிலோ மாவே மீதமிருந்தது. பாண் வாங்குவதற்காக ஆறு மணிக்கு ஊரடங்கு தளர்த்தப் பட்ட சில நிமிடங்களிலேயே அம்மா பேக்கரி வாசலுக்கு சென்று விடுவாள். அவ்வாறு சென்றே எழாம் எட்டாம் ஆளாகத்தான் வரிசையில் இடம் கிடைக்கிறது என்று அலுத்துக் கொள்வாள். ஏழு மணி அளவில் தான் பாண் வினியோகம் ஆரம்பமாகும். பல வீடுகளில் காலைச் சாப்பாடு பத்து மணிக்குத்தான். பாடசாலை செல்லும் பிள்ளையொன்றின் கதியை இங்கு நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். கப்பலில் பொருட்கள் அனுப்பப் படுவதற்கு முன், ‘அங்கு பாண் கொடுக்கிறார்களாம் இங்கு பாண் கொடுக்கிறார்களாம்’ என்று பல மைல்கள் நடந்து சென்று பாண் இல்லை என்ற அறிவிப்புப் பலகையைப் பார்த்து ஏமாற்றத்துடன் மக்கள் திரும்பினார்கள்.
பனங்கட்டியுடன் பிளேன் ரீ குடிப்பதற்கும் வெறும் பிளேன் ரீ குடிப்பதற்கும் பழக்கப் படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் என அம்மா கூறினாள். ஏற்கனவே எனது தேனீரிலும் மாற்றம் தெரியத் தொடங்கியிருந்தது. நெஸ்கஃபேக் குப் பதிலாக சங்கம் கொடுத்த ஏதோ ஒன்றை மாஞ்சருகுப் புகை மணத்துடன் விழுங்க வேண்டியிருந்தது (காஸ் தீர்ந்து நாளாகிறது). வெதுப்பகங்களில் தரும் பாண் வேகாமல் பச்சையாய் இருந்தது. ரோஸ்டர் இருந்தால் தப்பித்தேன். எனக்கு இவற்றைப் பாவித்து உண்ணுகையில் பெரும் சஞ்சலமாகவும் ஏதோ குற்றத்தைச் செய்வது போலவும் இருக்கிறது. மரக்கறிகளை மெலிதாக அவித்து உப்பும் சோஸ்உம் சேர்த்து மதிய உணவை முடித்துக் கொள்ளும் எனக்கு அதிக சிக்கல் கள் இருக்கவில்லை. ஆனால், மீன் முட்டையின்றி உணவு உள்ளிறங்காத பல நண்பர்கள் மிகவும் அவதிப் பட்டுக் கொண்டிருந்தனர்.
சவர்க்காரங்களுக்கும் டிடர்ஜன்ட் தூள்களுக்கும் பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது. விலை எகிறிக் கொண்டேயிருக்கிறது. அவற்றில் எதையாவது ஒப்பீட்டளவில் குறைந்த விலையில் வாங்கி விடுவது பெரிய சாகச நிகழ்வு போல மாலை நேர சந்திப்புகளில் அம்மாமார்களால் அலசப் படும். இவ்வாறே மத்திய தர மற்றும் உயர்தர வகுப்பின் பிரச்சனைகள் ஒப்பீட்டளவில் சிக்கலற்று இலகுவில் கடந்து போகக்கூடியதாக காணப்படுகின்றன. மத்திய வர்க்க மக்களுடைய சிக்கல்களையும் துலங்கல்களையும் அறிந்து கொள்ளமுடிந்தாலும் விளிம்பு நிலை மக்கள் குறித்து நாம் என்னத்தை தெரிந்துவைத்திருக்கிறோம் என்ற கேள்வி எம்மைக் கொன்று கொண்டிருந்தது. போர் மற்றும் அதன் விளைவுகள் பற்றிய புரிதலை எமக்குள் சரியாக ஏற்படுத்தி கொள்வதற்கான எத்தனிப்பின் ஒரு பகுதியாகவும் குற்றவுணர்விலிருந்து விடுபடுவதற்காகவும் நாம் இடைத்தங்கல் முகாமொன்றுக்கு செல்ல முடிவெடுத்தோம்.
-------
அல்லைப்பிட்டியின் கண்ணீரும் குருதியும் ஓகஸ்ட் 11க்கு சற்று முன்பு தான் சர்வதேச ஊடகங்களில் இடம்பிடித்திருந்தது. அவற்றின் ஈரம் காய்வதற்குள்ளாகவே மீண்டுமொருமுறை அம்மக்கள் தமது நிலத்தில் இருந்து பிடுங்கியெறியப்பட்ட கோரம் நிகழ்ந்திருந்தது.. மண்டைதீவு அல்லைப்பிட்டி மற்றும் பாஷையுhர் ஆகிய இடங்களிலிருந்து துரத்தியடிக்கப்பட்ட மக்கள் தஞ்சம் புகுந்திருந்த இடம்தான் ஓ.எல்.ஆர் தேவாலய இடைத் தங்கல் முகாம். 61 குடும்பங்கள் 324 பேர், சிறிய மண்டபமொன்றில்.
நாம் அங்கு சென்ற காலை மழை பெய்து ஓய்ந்திருந்தது. அந்த மக்கள் யாருமே எங்களுடன் கதைப்பதற்குத் தயாராக இல்லை என்பதற்கு மேலாக அவர்களுடன் கதைக்க நாம் மிகவும் பயந்து கொண்டிருந்தோம். தலையில், கையில், எதிர்ப்படும் ஒவ்வொருவருமே மருந்துக் கட்டுகளோடிருந்தார்கள். மூக்குச் சளி வழிய வழிய கெந்தித் தட்டு விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்குழாம் ஒன்றுடனேயே எம்மால் தொடர்புற முடிந்தது. உடுப்புகள் காய்ந்து கொண்டிருந்தன. ஒருவித துர்நாற்றம் வீசிக் கொண்டிருந்தது. எந்த ஒரு கணத்திலும் முகஞ்சுழிக்கக் கூடாது என்பதில் கவனமாயிருந்தோம். தேங்கியிருந்த மழைநீரின் நடுவில் நாய் மலம். (நண்பி சேலையை நிலத்தில் முட்டவிடாது உயர்த்திப் பிடிக்க வேண்டியதாயிற்று. எனது டெனிம் ஜீன்ஸ் பற்றி நான் கவலைப் பட ஆரம்பித்திருந்தேன். என்ன செய்வது..எவ்வளவு தான் முயன்றாலும் கொள்கைகளுக்கு விசுவாசமாய் இருக்க முடிவதில்லை பல நேரங்களில். பலரும் இதை எதிர்கொள்கிறார்களா இல்லையா என்று ஒரே குழப்பமாகவிருக்கிறது.)
நீண்ட ஹோல், 64 குடும்பங்கள். துணிகளைக் கட்டி மறைப்புகளை ஏற்படுத்தியிருந்தார்கள். அரச சார்பற்ற நிறுவனம் ஒன்று பிறிம்பாக சமைக்குமிடத்தை அமைத்துக் கொடுத்திருந்தது. குறிப்பேடுகளை மறந்தும் தொடுவதில்லையென முன்கூட்டியே முடிவெடுத்திருந்தோம். அங்கு நின்றிருந்த சிறுவர்களிடம் பேச்சுக் கொடுத்தோம். அவர்களில் சிலர் தாயை, தந்தையை, சகோதரர்களை அல்லது ஒருசேர அனைவரையுமே பறிகொடுத்தவர்கள். அவர்களுடன் எதைப் பேச, சிறுவர்களின் அனர்த்த நிவாரண சிகிச்சை அரங்குகள் குறித்து நாம் கற்ற எவையுமே உதவவில்லை. உளவியலைத் தூக்கி குப்பையில் எறிந்துவிடலாமா என்றிருந்தது... எங்களில் சிலருக்கு இருந்த முன்முடிவுகளுக்கு அதிர்ச்சியுhட்டும் விதத்தில் அச் சிறுவர்கள் கெந்தித் தட்டு விளையாடிக்கொண்டிருந்தனர். தமக்கு நடந்தவற்றை ஒரு சாகசக் கதை போல விவரிக்குமளவுக்கு யுத்தத்திற்கு அவர்கள் இசைவாக்கமடைந்திருப்பது உண்மையிலேயே அதிர்ச்சியுhட்டுகிறது.
கல்; பணிஸ் பாக்கெட்டுகளை வாங்கி 6 உள்ள சிறிய பொட்டலங்களாக அவற்றைப் பிரித்துப் பாக் செய்து கொண்டு மறுநாள் காலை 10 மணிக்கு மீண்டும் அங்கு சென்றோம். எமக்கு அல்லைப்பிட்டியைச் சேர்ந்த ஒரு மாணவனுடன் உரையாடும் வாய்ப்புக் கிடைத்தது. அம்மாணவன் இந்த மார்கழியில் ஒ.எல் பரீட்சை எழுத இருப்பவர். பதிவு செய்யப்பட்டு பின் வெட்கத்துடன் எம்மால் தணிக்கை செய்யப் பட்ட பகுதிகள் நீங்கலாக அவரது உரையாடல் பின்வருமாறு:
“நாங்கள் இஞ்சை வரேக்கை இந்த ஃபாதரும் தொண்டு நிறுவனங்களும் நல்லாத்தான் கவனிச்சவை. வேள்ட் விசன் கிட்டடில இருகிறதாலை பரவால்லை..தொடக்கத்தில சமைச்ச சாப்பாடு தந்தாங்கள்..போட்டோ எடுத்திச்சினை. பிறகு ஒண்டையும் காணேல்லை. இப்ப நாம தான் சமைக்கிறது.. சமைக்கிறதுக்கு பிறம்பா இடம் போட்டுத் தந்திருக்கிறாங்கள்..
முந்திக் கொஞ்ச நாள் ஃபிரீயாச் சாமான் தந்தாங்கள்.. இப்ப நிலமை தலை கீழ். கோப்பிரட்டியில காசுக்குத்தான் சாமான் தந்தவை - அல்லைப்பிட்டிச் சனங்கள் எண்டு தெரிஞ்சும்.
'.........'
'இல்லை.. பிறகு ஆராரோவெல்லாம் போய் கதைச்சு ஒருமாரி பில்லைக் கொண்டு வந்தால் காசு திருப்பித் தாறம் எண்டாங்கள். ஒண்டுமே இல்லாம வந்திருக்கிறம் இவேன்ர பில்லையே காப்பாத்தி வச்சிருக்கி.. (பதிவில் தடங்கல்) பில்லையே காப்பாத்தி வச்சிருக்கிறம்...ஆ. பிறகு ஒருமாரி காசு தந்தாங்கள்..ஒரே அலைச்சல்"
இஞ்சை கரையுhர்ச் சனங்களும் தீவிலருந்து வந்த நாங்களும் இருக்கிறம். இரவில ஒரே நுளம்பு. இப்பான் கொஞ்ச நாள் முந்தி நுளம்பு நெற்று தந்தாங்கள். ஆம்பிளையள் எல்லாம் அந்த மேடையிலதான் படுக்கிறது. ஒண்டுக்கு இரண்டுக்குப் போறதெண்டதுதான் பிரச்சனை.
பெம்பிளையளும் பிளையளும் ஏலாவாளியளும் தான் பாவம். அங்கை பாருங்கோ.. அந்த அம்மா செத்துப் போச்சுதெண்டா நல்லது... ஒரு பிரச்சனையும் இல்லை.. பிள்ளை போட்டுது. ஆள் தனிக்கட்டையாப் போனா காட்டியிருக்கிற சாறன் கூட நான் குடுத்து ஒரு அன்ரா கட்டிவிட்டதுதான்.
எல்லாத் தொண்டர் நிறுவனக்களுமே சாமான் தர வந்தாலும் எங்களுகுள்ள அடிபிடியளப் பாத்திட்டு திரும்பிப் போட்றாங்கள். உம்மையில, நாங்களும் (அல்லைப்பிட்டி) மண்ண்டைதீவுச் சனமுந்தான் உடுத்த உடுப்போட ஓடி வந்த சீவன்கள். கரையுhர்க் காரரைக் கர்த்தர் காப்பாத்திப் போட்டார். அவைக்கு சாமான் சக்கட்டுகளோட எழும்புறதுக்கு நேரமிருந்தது. எங்களுக்குத்தாறதெல்லாம் தங்களுக்கும் தா எண்டு அவங்களோட மல்லுக் கட்டி ஏலுமே.. எல்லாரும் அடிபடுங்கோ எண்டு விட்டிட்டாங்கள் போல.. பின்னேரங்கள்ள ஊருக்குள்ளால போய்க் கசிப்படிக்கிறது தான் இஞ்ச கொஞ்சத்துக்கு வேலை.. குடிச்சிட்டு வந்தா ஒரே தூஷணமும் கத்துப்படுகையுந்தான்.
ஃபாதருக்கும் பிடிப்பு விட்டுப் போச்சு, எங்களைக் கலைச்சாக் காணும் எண்ட பொசிசனில தான் ஆள் இப்ப..
பள்ளிக்கூடம் ஒரு நரகமண்ணை.. என்ர தம்பி--ஆள் கொஞ்சம் உருளை-- இப்ப மெலிஞ்சு போனான். காச்சட்டை வழுகி விழுது. பள்ளிக் கூடத்தில வாத்தி எழுப்பிக் கேட்டானாம் “என்னடா தோப்ளாஸ் வீட்டில பட்டினியே?" எண்டு. இவன் தான் முகாமில இருக்கிறதைச் சொன்னகொண்ண எல்லாப் பெடியளும் திரும்பிப் பாத்தாங்களாம். ஆள் வீட்ட வந்து பள்ளிக்கூடம் போமாட்டன் எண்டு ஒரே சிணுக்கம். நான் முகாமில இருகிறதை பள்ளிக் கூடத்தில சொல்லேல்லை. சேர் மார் கேட்டிச்சினம் முகாம் பிள்ளையள் கையுயத்துங்கோ எண்டு.. நான் உயத்தேல்லை. என்ர இடம் அல்லைப்பிட்டி எண்டு மிஸ்ஸ்உக்குத் தெரியும்.. மிஸ் கேக்க நான் சொந்தக் காரர் வீட்டில இருக்கிறதாச் சொல்லிப் போட்டன். எனக்கு பேரை பதிவமெண்டும் சாதுவா ஆசை.. எதுவாவது தருவினை.. சரியா அந்தரப் பட்டுட்டன்.. (கண் கலங்குகிறது.)
இங்கிலிசைத் தவிர எல்லாப் பாடத்துக்கும் 60க்கு மேல எடுப்பனண்ணை. ஸயன்ஸ் நல்லச் செய்வன். சேர் ஏயில பாஸ் பண்ணுவன் எண்டு சொன்னவர். இப்ப பயமாயிருக்கண்ணை. அப்பிளிக்கேசன் போட்டாச்சு. மெடிகல் குடுப்பமோ எண்டும் யோசிச்சன். அப்பா கத்துவார். காலம் பிந்தப் பிந்தப் படிப்புச் செலவு கூடுமாம். ஓடேக்க அப்பா முதல்ல கட்டித் தூக்கினது தம்பீன்ரயும் என்ரயும் புத்தகங்களைத் தான். எல்லாம் மறந்து போச்சு இஞ்சை இருந்து படிக்கேலா.. பேர்சனல் கிளாசுக்கு கன பெடியள் போறவங்கள்.. நாங்கள் கஞ்சிக்கே வழியில்லாமல் இருக்கிறம்.. இரவில கரண்ட் பத்து மணி மட்டும் தான். அதுக்கையும் இஞ்சை பெரிசுகள் லைட்ட நூர் நித்திரை கொள்ளோணும் எண்ணுங்கள்;: லைட் சுவிச்சை வேள்ட் விசன் கன்ரோல் பண்ணுறதால ஒருமாரிப் படிக்கலாம். சத்தியமா உங்களுக்கு விளங்குமோ என்னவோ, என்னால இந்தச் சோதினை பாஸ் பண்ணேலா.. இண்டைக்கு எண்ட இங்கிலிசு வாத்தி சொன்னான் படிப்பில கள்ளம் வந்துட்டுதாம்.. மீசை எங்கெங்கயோ முளைக்க படிப்பும் எங்கெங்கயோ பறக்குதாம்..
நம்புறியளோ தெரியா, பச்சைத் தண்ணி பல்லில படாமத் தான் பள்ளிக்கூடம் போறது. ஒருமாரி பள்ளிகூடத்துக்குப் போனா இரண்டாம் பாடமே பசிக்கத் தொடங்கீடும். இன்டேவலுக்கு மற்றப் பொடியள் சாப்பாடு கொண்டாறவங்கள். நான் வகுப்புக்கை இருந்தா தந்திடுவாங்கள் எண்டு நூலகத்துக்குப் போயிடுவன். சில நேரம் உப்புத்தூள் பிரட்டின மாங்காய் வாங்கிச் சாப்பிடுவன். இன்ரேவல் முடியத் தான் வகுப்புக்கை வாறது.”
மாணவன் மிகவும் கலங்கிக் கொண்டிருந்தார். அவரிடம் இவ்வாறு துருவுவது பற்றி எமக்குள் பல கருத்து வேறுபாடுகள் இருந்தன, ஆனால் அம்மாணவன் கதைக்க கதைக்க அவரிடம், உரையாடுதலுக்கான ஆர்வம் இருப்பதையும் உரையாடலின் போது அவரது மன இறுக்கம் மெல்ல மெல்ல தளர்வதையும் உணர முடிந்தது. உளவளத்துணையாளர்களின் பங்களிப்பு மிகவும் தேவைப்படுகின்ற நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையோ வேறு பொறுப்புக் கூறவேண்டிய இடங்களோ இதற்கான ஏற்பாடுகளை திருப்தியளிக்கும் வகையில் செய்ததில்லை. ஏதோ ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனம் சிறுவர்களை ஞாயிற்றுக் கிழமைகளில் விளையாட்டுக்களிலும் அரங்கச் செயற்பாடுகளிலும் ஈடுபடுத்துகிறது. அதுதவிர வேறெந்த உருப்படியான முயற்சிகளும் இல்லை.
தமது சுற்றங்களை இழந்து வந்திருப்போரிடம் கதைத்த போது அவர்களால் கைவிடப்பட்டு அழுக அழுக கவனிப்பாரற்று சிதைந்து இறுதியில் தமது சமயாசாரங்களுக்கு முரணான முறையில் எரியுhட்டப் பட்ட அந்த பாவப்பட்ட உயிர்கள் குறித்த குற்றவுணர்வு மனச்சிதைவின் எல்லைக்கு இட்டுச் செல்லும் அளவிற்கு ஊறியிருந்ததை அறிய முடிந்தது. (அல்லைப்பிட்டி உள்ளிட்ட தீவுப்பகுதிகளில் இருந்து மக்கள் துரத்தப்பட்ட போது கொல்லப்பட்ட உடலங்களைக் கொண்டுசெல்ல இயலவில்லை. அந்த உடலங்களை அடக்கம் செய்வதற்காக பலமுறை படைத்தலைமையகத்திடம் விண்ணப்பித்தும் எந்தப் பலனும் இல்லை. இறுதியில் மாவட்ட நீதிபதியினதும் உயர்மட்டத்தினதும் தலையீட்டால் அழுகிச் சிதம்பிய அச் சடலங்கள் பெறப்பட்டு எரியுhட்டப்பட்டன)
முகாமில் தங்கியிருக்கும் ஒன்றிரண்டு சைவக் குடும்பங்கள் தமது சமய கலாச்சார வழக்காறுகள் தொடர்பில் பல சிக்கல்களை எதிர் கொள்கின்றன.
ஓ.எல்.ஆர் தேவாலயம் இளைஞர் கழகத்தால் ஆளப்படுகிறது. கோயில் நிர்வாகம் இந்த அமைப்பின் மூலமாகவே அகதிகளுக்கு இடைஞ்சல் தந்து வெளியேற்ற முயற்சிக்கிறது. செபமாலை வழிபாடுகளின் போது கிணற்றடியைப் பாவிப்பதும் கழிவறையை பாவிப்பதும் இந்த அமைப்பினால் தடை செய்யப் பட்டிருக்கின்றன. குழந்தைகள் பெண்களும் இத்தடைக்கு உட்பட்டவர்களே. விதி விலக்குகள் கிடையா... ஒருமுறை இளம் பெண்ணொருவர் செபமாலை நேரத்தின் போது கிணத்தடியைப் பாவித்தமைக்காக கடுமையான தொனியில் எச்சரிக்கப் பட்டாராம். (வாளியைப் பறித்து வீசியதாகவும் கூறுகிறார்கள்) தீவகம் ஈ.பி.டீ.பீ அமைச்சின் கோட்டை என குறிப்பிடப் படுவது வழக்கம். ஈ.பீ.டீ.பீ யின் மீது அதிருப்தி கொண்டிருப்பவர்கள் அனைவரினதும் ஏச்சுக்களுக்கு இலக்கு இந்த அகதிகளே. இவர்கள் மீது உள்ளூர் வாசிகள் அடிக்கும் கேலி கிண்டல்களில் இந்த அமைப்பின் பெயரும் இழுபடுவது வழக்கம் என்பதால் இவர்கள் தொடர்ந்தும் மரணபீதியிலேயே இருக்க வேண்டிய நிலை. போதாக் குறைக்கு ஜிம் பிரௌண் அடிகளாரைத் தேடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களென சிப்பாய்களின் கோபக் கண்ணும் இவர்கள் மீது உண்டு. கோயில் நிர்வாகத்துக்கும் அகதிகளுக்கும் இடையிலான முரண்பாட்டில் முக்கிய பங்கு வகிப்பது மதப்பிரிவுகளே என்ற கருத்தும் நிலவுகிறது (ரோமன் கத்தோலிக்கம் எதிர் அ-ரோமன் கத்தோலிக்க மதப் பிரிவுகள்) யு.என்.எச்.சி.ஆர் அமைப்பு தற்காலிக சமையல் கூடமொன்றை அமைத்துக் கொடுக்க முன்வந்த போது கோயில் நிர்வாகம் அந்த திட்டத்தை அங்கீகரிக்கவில்லை. பெரிய கொடுமை என்னவெனில், அகதிகளான பெண்பிள்ளைகளைச் சீண்டவென வரும் நகர இளைஞர் கூட்டம் நேரடியாக சமையல் கூடத்துக்குச் சென்று அடுப்பு நெருப்பிலிருந்து சிகரெட் பற்ற வைக்கிறது. கோவில் நிர்வாகம் இது குறித்து அலட்டிக் கொள்வதில்லை. அகதிகளுக்கு உலர் உணவுப் பொருட்களை வழங்கும் விடயத்தில் தேவாலய நிர்வாகம் மிக வெளிப்படையாகவே தலையிடுகிறது. தொண்டு நிறுவனங்கள் வழங்கும் பொருட்களைப் பெற்று பங்கீட்டு நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. மதப்பிரிவு ரீதியான பாகுபாடு பங்கீட்டு நடவடிக்கையின் போது இடம்பெறுகிறது. இதை ஒருவாறு அறிந்து கொண்ட தொண்டு நிறுவனங்கள் தேவாலயத்துக்கு வெளியே வாகனங்களை நிறுத்தி அகதிகளை வெளியில் அழைத்து பொருட்களை பங்கீட்டு விநியோகம் செய்கின்றன.
13-08-2006 இங்கு வந்த இவர்களுக்கு இந்தக் கட்டுரையை மின் அஞ்சல் செய்;யும் விசையை சொடுக்கும் கணம் வரை (22-11-2006 காலை9.30மணி) எந்த மாற்று ஏற்பாடுகளும் செய்து கொடுக்கப் படவில்லை. குறித்த இடமொன்றில் 20 குடும்பங்களுக்கென ஒதுக்கப் பட்டுள்ள நிலப்பகுதியில் அமைக்கப் படவிருக்கும் வீடுகளாவது பெருமழைக் காலம் தொடங்குவதற்கு முன்பாக அவர்களிடம் கையளிக்கப் படுமா என்பதும் சந்தேகமே.
இடைத்தங்கல் முகாமின் பிம்பங்கள் என்னுள் மிகுந்த குற்றவுணர்வை ஏற்படுத்தும் வகையில் பதிந்து போயிருந்தன. பிளேன்ரீ டம்ளர் சரிந்து கிடக்க, பரட்டைத் தலையில் எறும்பூர உதடுகளில் இலையான் மொய்க்கும் பிரக்ஞையே அற்று உட்கார்ந்து எம்மை வெறித்த பெண்மணியை என்னால் எப்படி மறக்க முடியும்?
அன்றிரவு தூங்க முடியாதிருந்தது. பிரிட்டோனை வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். முதலில் நல்லதொரு தூக்கத்துக்கும் பிறிதொரு சமயம் தற்கொலைக்கும் அது உதவக் கூடும். 1001 கூல் ஜோக்ஸ் புத்தகத்தை புரட்டிக் கொண்டிருந்தேன். விடிந்த போது குருதி நிறச் சதைக் குவியலாய் சிதறி கிடந்தது சூரியன். திருமாவளவனின் ‘முல்லைத் தீவு’ கவிதை நினைவுக்கு வந்தது.
-----
எனது வீட்டிற்கு வந்து பழைய உடுப்புகளைப் பெற்றுச் செல்லும் செல்லும் ‘மாவிடிக்கிற மனிசி’ (பெயர் தெரியாது) தன் பேரனுடன் ஒருநாள் காலை வீட்டிற்கு வந்திருந்தார். தனது மகனை கடந்த மூன்று நாட்களாக காணவில்லையென்பதைப் பிரலாபித்துக் கொண்டிருந்தார். அம்மா சிறிதளவு புட்டு மாத்திரமே கொடுத்தாள். பாத்துக் கீத்து ஏதாவது தரும்படி அப்பெண்மணி அழத் தொடங்கியதும் என்னால் அங்கு நிற்க முடியவில்லை. அப்பெண்மணியின் பெண்ணின் சேலைத்தலைப்பைப் பிடித்தபடி விரல் சூப்பி ஒண்டி ஒளிந்து நின்ற அக்குழந்தையின் கண்களைப் பார்ப்பதின்னின்றும் நான் தப்பியோட விரும்பினேன். மிகவும் சங்கடமாக இருந்தது. அப்பெண்ணின் அழுகையொலியில் நான் மிகவும் ஆத்திரமடைந்தேன்.. ஏன் இன்னும் இவர்கள் செத்துப் போகவில்லை என்று. அம்மா வாழையிலையில் கொடுத்த புட்டை தின்னும் சிறுவனது வாயின் அசைவு எனக்கு கதற வேண்டும் போன்ற உணர்வை ஏற்படுத்திற்று. நரைத்த தலையுடன், உணவை விழுங்க அசையும் தொண்டை... அப்பெண்மணி ஒரு கவளம் பிட்டிற்கு ஒரு மிடறு குடித்தார். பட்டினியில் தொண்டை வறண்டு போயிருக்கும். சகிக்க முடியாதிருந்தது. கடவுளே.. ஏன் இவர்கள் உயிருடனிருக்கிறார்கள்..
அம்மா சில மாங்காய்களையும் மரவள்ளிக் கிழங்குகளையும் கொடுத்தாள். தணலில் புரட்டி புரட்டி சுட்டெடுத்த மரவள்ளிக் கிழங்குகளை எவ்வாறு உண்ணுகிறார்கள்? வயிற்றைப் பிசைந்தது. ஏதாவது செய்ய வேண்டும் போலிருந்தது. செய்து என்ன என்பது போலவுமிருந்தது.
மெல்ல மெல்ல பேரவலத்துக்கு நான் என்னைத் தயார்ப் படுத்திக் கொள்ள வேண்டும். நாய்க் குரைப்புகளுக்கு பழக்கப் பட்டுப் போனது போல், ஷெல் சத்தத்துக்கு பழக்கப்பட்டது போல், இனிப்பற்ற தேனீருக்குப் பழக்கப்படுத்திக் கொண்டது போல், இந்த உடலை மரணத்துக்கும் சிதைவிற்கும் தயார் செய்வதெப்படி?
ஏதோ சாப்பிட்டு பசியறியாது போர்வைக்குள் முடங்கி - என்னுடைய கவலைகள் இத்துடன் முடிந்து போகையில் நான் மிகவும் குற்றவுணர்வடைகிறேன். வறுமைக் கோட்டுக்குக் கீழ் என்ற அரச வகைப் பாட்டினுள் கீழ் மாதாந்த பிச்சைச் சம்பளம் பெறும் மக்களின் கதி என்னவாய் இருக்கிறது? அது குறித்து என்னால் யாது செய்ய முடியும். வெறும் சீமெந்துத் தரையில் படுத்துப் பார்த்தேன்.. இரண்டு நிமிடங்களுக்கு மேல் தாங்கவில்லை. தணலில் சுட்ட மரவள்ளி, ஈரவிறகுப் புகை, நாய்க் குலைப்பும் இருளும் சூழ்ந்த குடிசைகள்.. கடவுளே இவர்கள் எவ்வாறு உயிர்வாழ்கிறார்கள்..
அவர்களைக் குறித்து எழுத எனக்கு எவ்வித அருகதையுமில்லை. எழுதுவதன் மூலம் பிரதினித்துதுவம் செய்யப் படக் கூடிய பாடுகளல்ல அவை. அவர்களுடைய பாடுகளை அதன் வலியை, கசப்புகளை அவமானங்களை வலியை அவற்றின் அத்தனை பரிமாணங்களுடனும் எழுதிவிட முடியுமென்று நான் நம்பவில்லை.
----
பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதாக செய்திகள் கிடைத்த போது மக்கள் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. அவை குழப்பத்தில் மட்டுமே முடியும் என்பதை மக்கள் வெகு தெளிவாகவே புரிந்து வைத்திருந்தனர். ஆனால் ஒரு நப்பாசையில் அனைவரும் முடிவினை எதிர்பார்த்துக் காத்திருந்தனர். ஆனாலும் பெருட்களுக்காக அலையும் எமது நாளாந்த விதியிலிருந்து நாம் பிறழ்ந்துவிடவில்லை. ஊரடங்குத் தளர்வு நேரம் காலை 5மணி தொடங்கி மாலை 6மணியாக அதிகரித்த போதும் சரி, மின்சார விநியோக நேரம் கூட்டப் பட்ட போதும் சரி மக்கள் சந்தோஷப் படும் படியாக அவை இருக்கவில்லை. பாடசாலைகள் மீளவும் தொடங்கியிருந்தன. கொலைகளும் நடந்து கொண்டிருந்தன - பயங்கரமான விவரிக்கவே அச்சமூட்டும் கொலைகள். தொழில்நுட்ப நேர்த்தியுடன் லாவகமாக கொலை செய்யப் பட்ட பிரேதமொன்றை காண நேர்வதிலிருந்து தப்பிக்க முடிவதில்லை ஒரு நாளும். ஏதோவோர் சந்தில் அகப்பட்டு விடுகிறது, குருதி வழிய இறந்து கிடக்கும் மனித உடல்.
கப்பலில் அத்தியாவசியப் பொருட்கள் அனுப்பப் பட்டவுடன் ப.நோ.கூ சங்கக் கிளைகள் தமது வினியோக நடவடிக்கைகளைத் தொடங்கியிருந்தன. கூட்டுறவுச் சங்க கிளை முகாமையாளாளர்களும் உதவியாளர்களும் தெய்வங்களாக தம்மைப் பதவி உயர்த்திக் கொண்டனர். ஏச்சு வாங்கியபடி மக்கள் மந்தைகள் போல வரிசையில் நின்றனர் -- 6,7 மணித்தியாலங்களாகளாக, மழைக் குளிரில் நடுங்கியபடி. நிறுவைகளில் நடக்கும் குளறுபடிகளும் பாரபட்சங்களும் நிகழ்கின்றன என்று தெரிந்தும் மக்கள் தமது தாய் மொழியாம் ‘ம்’மைத் தவிர வேறெதையும் பேசத் தயாராக இருக்கவில்லை. மந்தைகள் போல வரிசையில், குழந்தைகளும் பெண்களும்..
பிற்பாடு விதானைமார்களுடனும் கிளையுடனும் பல பத்திரிக்கையாளர்களும் முற்போக்கு நோக்குடையோரும் முரண்படத்தொடங்கிய பின்னரே இந்த நிலமைகள் ஓரளவு சீராயின. எல்லாளன் படை துண்டுப் பிரசுரங்களில் சங்கக் கடைகளில் சுருட்டும் நபர்களை எச்சரித்ததை அடுத்து குறிப்பிடத் தக்க ஒழுங்கு வந்து சேர்ந்தது.
எல்லா வேலைகளையும் கிடப்பில் போட்டு விட்டு கிளை வாசல்களில் நிற்பதென்பது எல்லாருக்கும் முடிகிற காரியமாக இல்லை. அரசு கிள்ளித் தெளிக்கும் இப் பொருட்களுக்காக நீண்ட நேரம் காத்துக் கிடந்து பின்பே சமையலைத் தொடங்கும் வீடுகளும் உண்டு. மக்கள் மிக மோசமாக ஏமாற்றப் படுவதை தட்டிக் கேட்க முனைந்த புலனாய்வுப் பத்திரிகையாளர் ஒருவருக்கு ப.நோ.கூ சங்கம் தமது பிழைகளை வெளிப்படையாக ஆனால் திமிராக வெளிச்சமிடக் கூடிய கடிதமொன்றை அப் பத்திரிக்கையாளரை இழிவு செய்து அனுப்பியிருந்தது. சங்கக் கடை ஊழியர்களும் தமக்குக் கிடைத்த புதிய முக்கியத்துவத்தை இழக்கத் தயாராக இல்லை. நடைமுறை தொடர்பான மிகக் குழப்பமான அறிவுறுத்தல்களை பத்திரிக்கைகள் வெளியிடுகின்றன. உயர்- மத்திய வகுப்புக்கே மாத்திரம் விளங்கக் கூடிய மொழியிலமைந்த அவற்றை சாதாரண மக்கள் படித்துப் புரிந்து கொள்ள முடியாது. மக்கள் ஆவலாதி பட்டு ஊரடங்கு தளர்த்தப் பட்டு சில நிமிடங்களுக்குள்ளேயே விடிவதற்கு முன்பே பங்கீட்டு அட்டைகளுடன் கிளை வாசலில் வரிசை கட்டுகிறார்கள். கிளை 9 மணிக்குத் திறந்து 10 மணிக்கு தனது விநியோகத்தைத் தொடங்குகிறது. வரிசையில் நிற்கும் அரைவாசிப் பேருக்கு ஏதோ சிலது கிடைத்து விடுகிறது. கையிருப்பு முடிந்த நிலையில் ஏனையோர் தமது கைகளில் மேலும் கொஞ்ச இருளைக் கொண்டு சொல்கின்றனர் - இருளும் பசியும் நிறைந்த தமது வீடுகளுக்கு. பெரும்பாலும் அரச உத்தியோகத்தர்களது கார்ட்டுகள் செல்வாக்கினால் முதலிலேயே பொருட்களைப் பெரும் விதத்தில் வைக்கப் பட்டுவிடுகின்றன. கையிருப்பு முடிந்ததாய் அறிவிக்கப் பட்டவுடன் இருண்ட முகத்துடன் வெற்று மாட்டுத்தாள் பைகளை அசைத்த படி வீடு செல்பவர்கள் ஏழைப் பெண்களும் சிறுவர்களுமே. இன்னமும் மரவள்ளிக் கிழங்கு தான் அவர்களுக்கு உணவு. அரசு கிள்ளித் தெளிப்பதில் ஏதோ ஒன்றிரண்டைப் பெற்றுக் கொள்ள முடிந்தாலும் அவர்களிடம் உணவைத்தயாரிப்பதற்கான உபபொருட்களோ (உப்பு, தூள்), சமைத்துண்பதற்கான விறகோ அவர்களிடம் இல்லை. கொடுத்த கோதுமை மா வேறு மிகவும் பழுதடைந்து பாவனைக் குதவாத நிலையிலிருந்ததாய் முறைப்பாடுகள் கிடைத்தன. அடித்தட்டு மக்களுக்கு இன்னமும் அரிசியும் மாவுமே திருப்திகரமாக வழங்கப் பட்டிருக்காத நிலையில் நல்லை ஆதீனம் (மனிதப் பேரவலத்துக்கான அறிகுறிகள் தோன்றியிருந்த போதும் சரி, சக மதத் தலைவர்கள் அரசியல் தலமைகள் மீது அழுத்தங்களைப் பிரயோகிக்கத் தொடங்கிய போதும் சரி பேசாமல் உண்டியல் பணத்தில் குளிர்காய்ந்து கொண்டிருந்த அதே ஆதீனம் தான்), கார்த்திகை தீபத் திருநாளுக்கான விசேட பொருட்களை வலியுறுத்துகிறது. யாழ்ப்பாணத்தின் சமூக அமைப்பை விளங்கிக் கொண்டவர்களுக்கு யாழ்ப்பாணத்துக்கு வெளியே சொந்தக் காரர்களை வைத்திருப்பது வெள்ளாள உயர்குடியும், சில மேல்தட்டு கத்தோலிக்கர்களும் தான் என்பது புரியுமென நினைக்கிறேன். அவர்களே அஞ்சல் மூலம் பொருட்களைப் பெற முனைந்தனர். இது அவர்களுக்கு வந்திருந்த பொதிகளின் உள்ளடக்கத்தைப் பார்த்தாலே தெரிந்து விடும். பருப்புகளோ வேறு பாதுகாத்து வைக்கக் கூடிய உலர் உணவுகளோ அவற்றுள் அரிதாகவே தென் பட்டன. கட்டிப் பால் டின்கள், உருளைக்கிழங்கு, கடுகு , சீரகம் இவ்வாறன பொருட்களே அதிகளவிலான பார்சல்களில் இடம்பிடித்திருந்தன. குழந்தைகளுக்கான விசேட உணவுப் பொருட்களையும் மருந்து வகைகளும் கணிசமான அளவில் மத்திய தர வர்க்கத்துக்கும் உயர்குழாத்துக்கும் இந்த முறையில் கிடைத்தது. எனினும் பலருக்கு பார்சல்களில் உருளைக்கிழங்குகள் சிதைந்தும் பழுதடைந்தும் வந்தமை குறித்து விமர்சிக்க இடமிருந்தது. இக் குருhர நகைச்சுவையை எங்கு சென்று கூற?
இந்த நிலையில் தான் இராணுவம் தனது உத்திகளில் ஒன்றான கட்டுப்பாட்டு விலைக் கடைகளைத் திறந்தது. சாமான் குடுக்கிறாங்களாம் எண்டு கேள்விப் பட்டகொண்ண ஆவலாதிப்பட்டு பசியுடன் வந்து எப்ப கிளிப் களட்டி எறிவாங்களோ என்ற பயத்துடன் வரிசையில் நின்று அவமானத்துடன் பொருட்களைப் பெற்றுச் செல்லும் பஞ்சமர்களை படம் பிடித்து வெட்கமின்றிப் தனது பிரச்சாரத்துக்குப் பயன்படுத்துகிறது இராணுவம். ‘யாழ்ப்பாணத்தைப் பாதுகாத்து தந்த’ தமக்கு யாழ்மக்கள் நன்றி கூறுவதாக அலங்கார வளைவொன்றையும் நகர் மத்தியில் துளிகூட வெட்கமின்றித் தானே நிறுவிக்கொண்டது. இக்கடைகளுக்கு வந்து பொருட்களைப் பெற்று செல்லும் மக்களுக்கு பல எச்சரிக்கைகள், மிரட்டல்கள் விடுக்கப் படுகின்றன. அதற்கும் மேலாக அவர்களது சமூகப் பெறுமானம் கேள்விக்குள்ளாக்கப் படுகிறது (ஆமீன்ரய ஊம்புற துரோகியள்). உயர் வர்க்கம் வீட்டிலிருந்தபடியே அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்கிறது. மத்திய தர வர்க்கம் ப.நோ.கூ சங்கங்களில் செல்வாக்கு மூலம் கிள்ளித் தெளிக்கப்படும் பொருட்களில் கணிசமானதைப் பெற்றுக் கொள்கிறது. இராணுவத்தினரது கடைகளில் இருதலைக் கொள்ளி எறும்புகளாக அவமானத்துடன் நிற்பவர்கள் ஏழைச் சிறார்களே.
(அரசால் கண்துடைப்பாகக் கிள்ளித்தெளிக்கப் படும் பொருட்கள் அறவே போதாத நிலையில் தென்மராட்சிப் பிரதேச சங்கக் கிளைகள் குலுக்கல் முறையில் பங்கீட்டு அட்டைகளைத் தெரிவு செய்து பொருட்களை வினியோகிக்கின்றன. – உதயன்)
----
மாணவர்களிடையே தோன்றத் தொடங்கியிருக்கும் முனைப்புகள் 80களை நினைவுக்கு கொண்டுவருவதாய் அமைகின்றன. வீதிகளில் இளைஞர்களைக் காண்பது குதிரைக் கொம்பாக இருக்கிறது. எங்கும் இராணுவ நடமாட்டம். வீட்டில் நாய்கள் பூனைகள் போல எமது இளைஞர்கள்.
பல சிப்பாய்களுக்கு மாணவர்களைச் சீண்டி கோபப் படுத்துவது பிடித்தமான பொழுதுபோக்காகவோ மாறிவிட்டது. அடிப்பார்கள்.. காரணம் தெரிவதேயில்லை. மறித்து மிக விஷமத் தனமான கேள்விகளைக் கேட்பார்கள். சேர் போட்டு கதைத்தால் விட்டுவிடுவார்கள். இல்லாவிடில் சைக்கிளைப் பூட்டி திறப்பை எடுத்துக் கொண்டு கையை உயர்த்தியபடி முழந்தாளிட்டு நிற்கச் சொல்வார்கள் வீதியிலேயே... மாணவிகள் அவர்களைக் கடக்கும் நேரம் அவர்களைத் துவக்குகளால் தட்டி உரக்கச் சிரிப்பார்கள். அடோ. நாய் இப்பதங்கள் தான் வயது வேறுபாடின்றி அனைத்து தமிழனுக்கும் வழங்கப் பட்டிருக்கும் பெயர். பாடசாலைகளுக்குள் கூடப் புகுந்து அட்டுழியம் செய்கிறார்கள் அவர்களுக்கு எப்போது தான் விளங்கப் போகிறதோ தெரியவில்லை. ‘பொங்கி எழும் படைகளைத்’ உருவாக தாம் துணை புரிகிறோம் என்று. ‘முறிந்த பனை’ தொடங்கி சமீபத்திய புஷ்பராஜாவின் பதிவு வரை வாசித்து நம்முடன் தீவிரமாக கதையாடும் மாணவத் தோழர்களே ஒரு சந்தர்ப்பத்தில் எழுத்து மீதான அதிருப்தியையும் ஆயுதப் போராட்டத்தின் வன்முறை அரசியல் மீதான தமது சாய்வையும் வெளிப்படுத்திய போது ஆயுதக்கலாச்சாரம் தொடர்பான நமது பார்வையை மீள்-பரிசீலனை செய்ய வேண்டியதாயிற்று. இவ்வளவு நீண்ட போர்க் கலாச்சாரத்தின் பின்னான புதிய தலைமுறைக்குக் கூட எம்மிடம் பரிசளிப்பதற்கு யுத்ததைத் தவிர வேறேதுமில்லை. இருதரப்பும் மக்களுக்காக யுத்தம் புரிகிறார்கள். மக்களுக்கான யுத்த்தத்தை மக்களின் மீதே நடாத்துவதைத் தவிர வேறெதையும் இத் தலைமைகள் இதுவரை செய்ததில்லை.

வன்முறை அரசியலின் மீது பூசப்பட்டிருந்த அற முலாம் உதிரத் தொடங்கும் காலத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருப்பதாய்ப் படுகின்றது. குருhரம் வெளிக்கிளம்புகிறது. கொலைகள் ரசனை மனோபாவத்துடன் பண்ணப் படுகின்றன. எரியுhட்டிக் கொல்வதும், கதறிக் கதறிக் கும்பிடக் கும்பிடக் கொல்வதும் புதிய கொலைத் தொழில் நுட்பங்கள். மனித விழுமியங்களும், ஜனநாயக உரிமைகளுக்கும் மருந்துக்குக் கூடக் காணக் கிடைப்பதில்லை. இச்சிறையுள் இருந்து நாம் என்னத்தை எழுதி என்னத்தைக் கிழிக்க..

------------------------------------------------------------------------------------------------------------
ஆமிரபாலி எழுதியது போல நிச்சயமாக இது ஓர் சாம்பல் தேசம் தான். ஒவ்வொரு கணத்திலும் நாம் வாழ்ந்து கொண்டிருப்பது சடலங்களைத் தயாரிப்போரின் ஆட்சியின் கீழ் என்பதை உணர்ந்து கொள்ளும்படி நிர்ப்பந்திக்கப் பட்டிருக்கிறோம்.
எம்மைப் பணிய வைத்துவிடலாம் எனத் திட்டங்களைத் தீட்டியவாறிருக்கிறது சிங்கள பௌத்த மேலாதிக்க அரசு. மறுபுறம் தமிழ் அரசியல், கருத்தியல் வெறுமைக்குள்ளும் வன்முறைக்குள்ளும் மூழ்கத் தொடங்கியிருக்கும் நிலையில் மக்கள் திக்கற்று நிற்கிறார்கள். தமிழ் அடையாளத் திணிப்பை எதிர்க்கும் முஸ்லிம் முனைப்புகள் கூட அம்மக்களது பாடுகள் பற்றிய உண்மையான அக்கறையுடன் இல்லை. அதனினும் மேலாய், வன்முறையை தேர்ந்தெடுக்கும் முஸ்லிம் தேசம் தமிழ் தேசியவாதத்தின் வரலாற்றிலிருந்து எதையும் கற்றுக் கொள்வதாய்த் தெரியவில்லை. வரலாற்றிலிருந்து எதையும் கற்றுக் கொள்ளாதவர்கள் மீதுதான் வரலாற்றுக் தவறுகளின் மீள் நிகழ்த்துகை சாத்தியமாகிறது.
வரலாற்றின் பெயரால் யுத்தம் மக்கள் மீது தொடர்ந்து நிகழ்த்தப் பட்டவாறிருக்கிறது.
எமக்கான யுத்தத்த்தைப் புரிவதாய், எம்மைப் பாதுகாப்பதாய்க் கூறியபடி அதிகார மையங்கள் பண்ணிக்கொண்டிருப்பது என்ன என்பது பற்றியே நாம் கதையாட விரும்புகிறோம். இந்தக் கதையாடலினூடு அதிகார மையங்கள் தவிர்ந்த விளிம்புகளது பாடுகள் என்றுமே பொதுவான ஒருமைப் பாடுடையவை என்பதையும் இந்த விளிம்புகளிடையே சகவாழ்வு சாத்தியம் என்பது குறித்தும் வலியுறுத்த விரும்புகிறோம்.
வன்முறையைத் தீர்வெனத் திணித்தவாறேயிருக்கின்றன அதிகார மையங்கள். வன்முறையின் மூலம் நாம் எவ்வாறு புரிந்துணர்வை அடையப் போகிறோம்?

-முரண்வெளி-

No comments: