Tuesday, December 26, 2006

Caste & Class

உயர் இந்து வேளாள சமூக அமைப்பு: கட்டுமானங்களும் சிதறடிப்புக்கான முன்மொழிவும்

சிவில் சமூக வடிவமைப்பு என்பதில் சமூக நிறுவனங்களுக்கு ஓர் முக்கிய பங்கு உண்டு. தமிழ் சமூக உருவாக்கத்தில், அதனுடைய தன்மைகளைத் தீர்மானிப்பதில் அதிகளவு செல்வாக்குச் செலுத்துபவை கல்வி நிறுவங்களே என்பது கண்கூடு.
யாழ்ப்பாணத்துக் கல்வி நிறுவனங்கள் பெரிதும் இந்து-சைவ-வெள்ளாளக் நியமங்களால் / கிறிஸ்தவ வெள்ளாள மெட்டுக்குடி நியமங்களால் கட்டியமைக்கப் பட்டவையே. யாழ்ப்பாணத்துப் பாடசாலைகளில் ஓரிரு அரிதான விதிவிலக்குகளைத் தவிர இந்து ஆதீனம்Xகிறிஸ்தவ மிஷனரி என இரு பிரிவுகளுக்குள் அடக்கிவிட முடியும். இந்த இரு அணிகளுமே ஒன்றுக்கொன்று குறைவில்லாத வகையில் வெள்ளாள நலன் பேணும் மேட்டுக்குடி சமூக அமைப்பை வடிவமைப்புச் செய்கின்ற கருவிகள் தாம். மாணவர்களை இளநிலையில் சாதகமாகத் தகவமைத்துக் கொள்ளும் இச்செயற்பாடு இன்று வரை உக்கிரமாக எதிர்க்கப்படவில்லை.
மாணவர்களிடையேயான ஒழுக்கச் சீர்குலைவுகளை சீர்செய்யும் முயற்சியின் முதல்படியாக ஹார்ட்லிக்கல்லூரியின் தரம் ஆறு மாணவர்கள் தமது ஆசிரியர்களை (உபாத்தியாயர்களை என்பது மிகப்பொருத்தம்) வீழ்ந்து வணங்கும் படி கட்டாயப்படுத்தப் பட்டார்கள். இதை யாழ்.தினக்குரல் செய்தியாக வெளியிட்டது.
ஓ.எல் பரீட்சைக்காலம், மின்சாரம் சீரின்மை, எதுவந்தாலும் விடாப்பிடியாக கோவில்கள் அதிகாலை ஐந்து மணிக்கே சினிமா பாணி மெட்டிலமைந்த ஆபாசப்பாடல்களை ஒலிபரப்புவதால் உற்சாகமாக சுயபுணர்வில் ஈடுபடமுடிகிறதேயன்றி படிக்கமுடிகிறதில்லை. அதிகார அலுவலகங்களின் ஆசியுடன்தான் இது நடக்கிறதா என்பதைத் தெரிந்து கொள்வதற்காகவேனும் உரிய அலுவலகங்களுடன் தொடர்புற முடிவதில்லை. அலுவலர் ஆட்சியின் சீரழிவு அனைத்து இடங்களிலும் தலைவிரித்தாடுகிறது. கோவில்களில் சென்று தட்டிக்கேட்கவும் நாதியில்லை. வெள்ளாளர்கள் வீடு பூந்து அடிப்பதற்காக சிறந்த தலித்துக்களை வைத்திருக்கிறார்கள்.
இந்த சமூகத்தகவமைப்பின் வலுமிக்க கருவியாக பாடசாலை விளங்குகிறது. சொல்லின் செல்வர்களும் செஞ்சொற்செல்வர்களும் மணிக்கணக்கில் நடாத்தும் அறுவைகளை கேட்கவேண்டியிருக்கிறது - வாய்மூடியபடி.. மூத்திரம் வரும் எங்கள் குறிகளைப் பிசைந்தபடி. ஆணாதிக்க வெள்ள்ளாளப் பிற்போக்கு அவர்கள் வாயிலிருந்து வெளிவருவதைக் கண்டும் மூக்கைப் பொத்தமுடியாதபடி நிற்பான் ஒழுக்காற்று சட்டம்பி. எழுந்து செல்லமுடியாதபடிக்கு மண்டபவாயிலில் ஆமிக்காரன் போல நிற்பான் இந்து மாமன்ற வாத்தி. சமீப காலமாக பெருகிவரும் இத்தகைய அதிருப்திகளைச் சமாளிக்கும் பொருட்டு சில இந்துக்கல்லூரிகள் சுண்டல் விநியோகிக்கின்றன. ஒன்றிரண்டு பாடசாலைகளில் தான் இந்த ஏற்பாடு மற்றையவற்றில் எல்லாம் ஒத்துழையாமைக்கான துன்புறுத்தல்களே தண்டனை.
பாதிரிகளும் மேட்டுக்குடி எலைட் அசடுகளும் நளினம் கலந்து உளறும் அபத்தங்களையும் அவர்களது வெறுப்பூட்டக்கூடிய போலியான மனிதாபிமான நல்லெண்ணத்தையும் காது வலிக்கக் கேட்டுக்கொண்டிருப்பதற்கு லஞ்சமாக கேக்துண்டங்கள், பிஸ்கட்டுகள், குளிர்பானம் தருகிறார்கள். 'பாடசாலைகளினூடு நிறுவப்படும் சாதியம்' தொடர்பான கட்டுரை சுட்டுவது போலவே மேற்கூறியது மிஷனரிப்பாடசாலைகளின் தந்திரமான நுண்ணிய செயற்திட்டங்களின் ஒரு பகுதியே.
இவ்வாறான தந்திரங்கள் மூலம் / ஒடுக்குமுறை மூலம் கல்லூரிகளில் புறநிலையாளர்களது தோன்றுகைக்கான சாத்தியங்கள் பெருமளவிற்கு இழிவளவாக்கப்பட்டுவிடுகின்றன. கெட்டிக்காரத்தனமாய் புறநிலையாளர்களது உருவாக்கம் தவிர்க்கப்பட்டு விடுகிறது.

தமிழ்த்தினப் போட்டிகளைப் போல இந்துத்துவத்துக்கு வேறு சிறந்ந எடுத்துக்காட்டு இருக்குமா என்பது தெரியவில்லை. தமிழ்த்தினப் போட்டிக்கான விவாதத் தலைப்புகளாக கடந்த 5/6 வருடங்கள் கொடுக்கப்பட்டு வரும் தலைப்புக்களின் பட்டியலை ஒருமுறை பார்வையிட்டால் போதும். இந்து மேலாதிக்கம் தெளிவாக விளங்கி விடும். விவாதத் தலைப்புகள் கிறிஸ்தவ மாணவர்களுக்கு பெரிதும் பொருத்தமற்றவை. பெரும்பாலும் சைவ/இந்து புராணீகங்கள் நிகழ்வுகள் சார்ந்துமே இவை அமைகின்றன. விவிலியத்திலிருந்தோ குர்-ஆனில் இருந்தோ போட்டிகளுக்கான தலைப்புகள் தேர்ந்தெடுக்கப் படுவதில்லை.
தரம் 8/9களில் அறிமுகப்படுத்தப் படும் பாலியல் கல்வி (சுகாதாரமும் உடற்கல்வியும் பாடம்) பல பள்ளிக்கூடங்களில் நடாத்தப்படுவதில்லை. இங்கு இந்துத்துவமும் மேட்டுக்குடித்தனமும் moral police ஆக தம்மைக் காட்டிக்கொள்கின்றன. சுயபுணர்வு குறித்த இழிவுணர்வு, அது சார்ந்த பிரச்சனைகள் என மாணவர்கள் உளவியல் நெருக்கடிகளுக்கு ஆளாகுவதையும் உளவளத்துணையாளர்களை நாடி அவதியுறும் போக்கும் அதிகரித்து வருவது கண்கூடு.
Save the children போன்ற INGOக்களும் சரி, DCPC போன்ற அரச ஏற்பாடுகளாக இருந்தாலும் சரி இரு அணிப் பாடசாலைகளின் காவலர்களும் 'நோ என்றி' பலகையுடன் இருக்கிறார்கள். கருத்தரங்குகளுக்கான அனுமதி கிடையாது. துண்டுப்பிரசுர விநியோகங்கள் மட்டுப்படுத்தப் பட்ட அளவில் அனுமதிக்கப் படுகின்றன. பல தவிர்க்க முடியாத காரணங்களினால் இடம்பெறும் கருத்தரங்குகளில் கஎழுந்து கேள்வி கேட்கும் மாணவன் ஒழுக்காற்று சபையின் கடூரமான விசாரணைக்கு ஆளாக வேண்டி வரும். அரங்க செயற்பாட்டாளர்கள் இக்கல்லூரி நிர்வாகிகள் பற்றிய பல சுவாரசியமான கதைகளைக் கொண்டுவருவார்கள். அதையெல்லாம் இங்கு எழுதினால் ஓரு நகைச்சுவை நாவலாக மாறிவிடக்கூடும் இக்குறிப்பு.
எமது கவனப் படுத்தல் பூரணமான ஒன்று அல்ல. நீண்ட விரிவான கள ஆய்வைக் கோரினிற்கும் ஆய்வொன்றுக்கான முன்மொழிபாகவே பாடசாலைகளினூடு சாதியம் பற்றிய தோழர்களது அனுபவப்பகிர்வுகள், கட்டுரைகள், குறிப்புகள் முரண்வெளியில் பதிவேற்றப்படுகின்றன. யாழ்ப்பாணப் பாடசாலைகள் செய்துவரும் சமூக வடிவமைப்பு மிக நுண்ணிய தளத்தில் ஆய்வு செய்யப்பட வேண்டிய விடயம்.
மத நீக்கம் செய்யப்பட்ட பிள்ளைநேயப் பாடசாலைகளுக்கான முனைப்புகளுக்கு எதிராக அறம், வன்முறை நீக்கத்துக்கான மதப் போதனை கட்டுப்பாடும் ஒழுக்கமும் போன்ற வேடப்பெயர்களில் மீள் வலிதாக்கம் செய்யப்படும் பிற்போக்குத் தனங்கள் வலுப்பெறத் தொடங்கியுள்ள நிலையில் திறந்த கதையாடலுக்கான முனைப்புகளைத் தூண்டுதலின் அவசியத்தை நாம் உள்ளுணர்ந்தோம்.
எரிகின்ற பிரச்சனைகளை மாத்திரம் கவனப் படுத்துகிற ஊடகங்கள் நாளைக்கு எரியப் போகும் பிரச்சனைகள் குறித்து கவனஞ் செலுத்தத் தயாராயிருப்பதில்லை. இந்த நிலையில் சாதியம் பற்றிய தனது மின்தொகுப்பை வெளியிடுகிறது முரண்வெளி.
கருத்துக்களை வரவேற்கிறோம்

மேலதிக வாசிப்புப் பிரதிகள்:
'யாழ்ப்பாணத்துச் சாதியம் ; காலனித்துவ சமரசம்'
மு.நித்தியானந்தன்
பக்.40-47, கறுப்பு (தொகுப்பு - சுகனும் ஷோபாசக்தியும்)

'விலங்குப் பண்ணை' - ஷோபாசக்தியின் சிறுகதை - சத்தியக்கடதாசி

'Schooling in Jaffna' - S.R.H.Hoole
in, 'The Exile Returned : The self-portrait of the tamil vellaahlahs of jaffna'
Aruvi publishers
Colombo

(முஸ்லிம் சுகைராக் கல்லூரிகளிலும் பிரிவேனாக்களுடன் இணைவுகொண்ட பாடசாலைகளிலும் யாழ்ப்பாண நிலவரங்களது இணைத்தன்மைகள் உண்டென நண்பர்கள் வாயிலாக அறிய முடிகிறது. முரண்வெளியின் செயற்பாட்டாளர்களில் யாரும் அத்தகைய நிறுவனங்களுடன் தொடர்புகளைப்பேண முடியாதிருப்பதால் ஆதாரங்களைத் திரட்டுதலும் குறிப்புகளைத் தயாரிப்பதும் சாத்தியமற்றதாய்த் தெரிகிறது. பொருத்தமான இடங்களிலிருந்து ஆதாரங்களுடனான கட்டுடைப்பை முரண்வெளி உங்களிடமிருந்து வேண்டிநிற்கிறது.)

முரண்வெளி - யாழ்ப்பாணக் குழுமம்

-வாசிகன்-
பாடசாலைகளினூடு நிறுவப்படும் சாதீயமும் மதமேலாதிக்கமும்;
பிந்தைய நிலவரங்கள்


1

யாழ்ப்பாணத்தின் பிரபலமிக்க ஆண்கள் பாடசாலையான யாழ் இந்துக்கல்லூரியில் கல்விகற்றுக்கொண்டிருக்கும் நண்பர்கள் அக் கல்லூரியின் வெள்ளாள பார்ப்பனச் சாய்வு குறித்து அதிர்ச்சியூட்டும் தகவல்கள் பலவற்றை கூறுவார்கள். நாவலர் பற்றிய சரிநிகர் விவாதங்களை ஆழமாய்க் கற்று கறுப்பு போன்ற விளிம்புநிலைக்குரல்த் தொகுப்புகள் வாசித்துக் கருத்தாடும் நண்பரொருவரும் யாழ் இந்துவில் கல்விகற்பதனால் ஏற்படும் உடலுபாதைகள் பற்றி நகைச்சுவையாகக் கூறுவார். பலவகைகளிலும் யாழ் இந்து, சென் ஜோண்ஸ் பாடசாலைத் தோழர்களின் விபரிப்புகளே எனது கட்டுரைக்கான மூல்கங்களும் தூண்டுதல்களுமாகும். பெயர்வெளியிட முடியாத நிலையிலிருக்கும் அம்மாணவர்களுக்கான நன்றியுணர்வுடன் நாம் பாடசாலை விடயங்களுக்குள் நுழையலாம்.

***

நான் இங்கு முக்கியமாக எடுத்துக்கொள்கிற களம் பாடசாலைகளே. பல்கலைகழகம் போன்ற இதர கல்விநிறுவனங்களிலும் கீழ்விபரிக்கப்படும் சாதிமேலாதிக்கத்தின் இணைத்தன்மைகள் அவதானிக்கப்பட்டுள்ள போதும் தரவு மற்றும் ஆதாரங்கள் போதாமையை மனங்கொண்டு அவை பற்றிய தகவல்கள் இங்கு தரப்படவில்லை.

***

எனக்குக் கிடைக்கும் வாய்மொழித் தகவல்களின்படி யாழ் இந்துவைவிட மற்றைய இந்துக்கல்லூரிகள் முற்போக்கானவையாகக் காட்டிக்கொள்ள முற்பட்டாலும் யாழ் இந்துவிற்கும் மற்றையவற்றுக்கும் இடையே துளியளவும் வித்தியாசம் கிடையாது என்பதுதான் உண்மை. கீழே பட்டியற்படுத்தப்படும் தகவல்கள் ஒன்றிரண்டு மாற்றங்களுடன் அனைத்து இந்துக்கல்லூரிகளுக்கும் பொருந்திப் போகக்கூடியவையே.

· பாடசாலைகளுக்கு புதுமுக மாணவர்களை உள்ளீர்க்கும் செயன்முறைகளின் போதே இந்துவேளாள வடிகட்டல் தொடங்கி விடுகிறது. தரம் ஐந்து புலமைப்பரிசிலும் நுழைவுத்தேர்வுகளும் அனுமதிக்கான முன்நிபந்தனைகள். புலமைப்பரிசிலில் பெரும்பான்மை புள்ளிகள் பெற்றுவருவது அதிகமும் டாக்குத்தர் இஞ்சினியர் லோயர் அன்ன பிறரின் பிள்ளைகளாகவே இருந்துவிடுவதால் அதிகம் பிரச்சனைகள் ஏற்படுவதில்லை. ஆயினும் பொஸ்கோ போன்ற கத்தோலிக்க வெள்ளாள பாடசாலைகளூடு புலமைப்பரிசிலைத் தட்டிவிடும் கிறிஸ்தவர்களும் அபூர்வமாக சித்தியடைந்துவிடும் தலித்துக்களும் புலம்பெயர் உறவுகளால் புதுப்பணக்காரர்களாகிய தலித்துக்களும் தான் இந்துக்கல்லூரிகளுக்கு இருக்கும் முக்கிய சவால்கள். நேர்முகத் தேர்வின் போது மேற்குறித்தவகை மாணவர்கள் வேறுபாடசாலைகள் குறித்துச் சிந்திக்கும்படி தூண்டப்படுகிறார்கள். நன்கொடைத்தொகையைக் கூட்டிக் கேட்டல் போன்ற பொருத்தமான உத்திகள் மூலம் இது நடக்கிறது.

· 8ம் வகுப்பு வரையான மாணவர்களிடம் மாத்திரமே வாத்தியார்களதும் சட்டம்பிமார்களதும் (கவனிக்க ஆசிரியர்கள் அல்ல) செல்வாக்கு எடுபடுகிறது. 9ம் 10ம் தரங்களில் ஆயுதக்கலாச்சாரம் ஊடுருவிவிடுவதால் வாத்திகள் பெரிதும் அடக்கியே வாசிக்கும். 8ம் ஆண்டு வரையிலான மாணவர்கள் அனுபவிப்பது நரகம். மாணவர்கள் நெற்றியில் திருநீறு அணிந்து வராத பட்சத்தில் தண்டிக்கப்படுகிறார்கள். 'ஏன் அணிந்து வரவில்லை' என்ற அதட்டலுக்கும் உறுக்கலுக்கும் பின்பே நீ வேதமா என்ற கேள்வி வரும்.

· பாடங்கள் தொடங்குகையில் சில ஆசிரியர்கள் தேவாரம் பாடியே கற்றல் செயற்பாடுகளை ஆரம்பிக்கின்றனர். கிறிஸ்தவ மாணவர்களும் மதாவனம்பிக்கையுடைய மாணவர்களும் கூட எழுந்து நிற்கும்படி கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். அநேக சந்தர்ப்பங்களில் இந்தக்கட்டாயப் படுத்தலுக்கு எந்த தேவைகளும் இருப்பதில்லை; மாணவர்கள் தாமே எழுந்து நிற்கிறார்கள்.

· தண்டனை மற்றும் விசாரணைகளில் இருந்து பிராமண மாணவர்களும் பிரபலங்களின் பிள்ளைகளும் மிக இலகுவாக தப்ப முடிகிறது.

· கிறிஸ்தவ சமயம் இந்துக்கல்லூரிகளில் கற்பிக்கப்படுவது கிடையாது. மாற்று ஏற்பாடுகள் ஏதுமில்லை. சமய பாட நேரங்களில் நூலகத்துக்கோ மைதானத்துக்கோ அனுப்பிவைக்கப்படுவார்கள். ஆங்கிலமொழிவழிக் கல்வி வகுப்புகளில் முதல் மூன்று இடங்களில் ஒன்றை யாரேனுனுமொரு கிறிஸ்தவ மாணவன் பெற்றுவிடுகிற நிலையிலும் கூட இந்த அவலம் தொடர்கிறது. கிறிஸ்தவ மாணவர்கள் சைவசமயம் பாஸ்பண்ண இலகுவானது என்றவகைப் போதனைகள் மூலம் திசைதிருப்பப் ப்டுகிறார்கள். 2007 ஓகஸ்ட் க.பொ.த உயர்தரப் பரீட்சை எழுதப் போகிற அணியில் இருக்கும் மாணவர்களில் இரு கிறிஸ்தவர்கள் சாதாரண தரத்தில் சைவ சமயத்தையே எழுதினார்கள். கிறிஸ்தவம் தொடர்பாக அவர்களுக்கு ஒன்று தெரியாது. தேவாரம் நன்றாகப் பாடுவார்கள்.

· பிரார்த்தனை ஒன்றுகூடலில் பஞ்சபுராணம், பஜனை, மந்திரம், தியானம் என்று நடாத்துகிறார்கள். உடற்பயிற்சி நடாத்தப்படுவதில்லை - ஓங்கார மூச்சுப் பயிற்சியில் அவ்வளவு நம்பிக்கை. எவ்வளவுதான் தாமதமானாலும் பார்ப்பன மாணவன் இருந்தால்தான் நடராஜர் சிலைக்கு வழிபாடு நடக்கும். மேலும் அனைத்து மாணவர்களும் தலா 2/= இந்துமாமன்றத்துக்கு வழங்க வேண்டும். கிறிஸ்தவ மாணவர்களுக்கென்று தனியாகப் பிரார்த்தனை நடாத்தப் படுவதில்லை. கிறிஸ்தவ மாணவர்கள் திருநீறணிந்து சப்பாத்துக்கழட்டிப் பிறகு பிரார்த்தனை மண்டபத்தினுள் நுழையலாம். பிறர் பிரார்த்தனை மண்டபத்துக்கு வெளியே கால் கடுக்க நிற்பதைத் தவிர வேறு வழியில்லை. கிறிஸ்தவ மாணவர்கள் பிரார்த்தனை நேரம் முடிய பாடசாலை வரலாம் / பிரார்த்தனை நேரங்களில் வகுப்பறைகளில் அமர்ந்திருக்கலாம் போன்ற் எவ்வித நெகிழ்வுகளும் நிர்வாகத்திடம் கிடையாது. வகுப்பில் உட்கார்ந்திருந்தால் மாணவத்தலைவர்களும் ஒழுங்குபேண் வாத்திகளும் அந்தரப்பட்டு எப்படியாவது விறாந்தைகளுக்கு விரட்டிவிடுவார்கள்.

· பாடசாலைக் கீதம் இசைக்கப் படுவதற்கு முன்பாக தேவாரம் இசையுடன் பாடப்படும். கிறிஸ்தவ மாணவர்களும் எழுந்து நின்று கண்மூடி கைகூப்ப வேண்டும். சற்றே முரண்டுபிடிக்கும் இளம் மாணவர்களுக்கு சொல்லப்படும் சமாதானம் 'நீ உன்ர கடவுள நைச்சுக்கொள்'

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி உள்ளிட அனைத்துப் பாடசாலைகளிலும் வெள்ளாள மேலாதிக்கப் போக்கு சமீபகாலங்களில் கேள்விக்குள்ளாகி வருவது வெறும் மேல்மட்டத் தோற்றப்பாடே தவிர உண்மையல்ல. மேலும் இந்தக் கேள்விக்குள்ளாக்கல் எவ்வாறு அமைகிறது என்பதை நாம் உற்று நோக்க வேண்டும். (உதாரணங்கள் - மாணவர்களது விநோத சிகையலங்காரங்களை, ரைற்றாக ஜீன்ஸ் அணிவதை முன்புபோல் எதிர்க்க முடிவதில்லை, பெண்களை மிக மோசமாக துன்புறுத்தும் கேலிகளில் ஈடுபடும் மாணவர்களைக் கண்டிப்பது கூட பெரும்பாடாய் இருக்கிறது) இப்படியான கேள்விக்குட்படுத்தல்கள் நமது சமூகம் வீழ்ந்துகொண்டிருக்கும் வீழ்ச்சியின் இன்னொரு நோய்க்கூறான சாட்சி என்பதற்கும் மேலாக எதிர்காலத்தில் அறநெறி/மதம் போன்றவற்றின் மீள்வலிதாக்கத்துக்கு துணைபோகக் கூடும்.



2

கிறிஸ்தவப் பாடசாலைகள்-முக்கியமாக அங்கிலிக்கன் திருச்சபையின் சமயப் பரப்புக் கருவியும் மறுகாலனியாதிக்க சக்தியுமான சென்.ஜோன்ஸ், சுண்டுக்குளி மகளிர் போன்றவை- இதுக்கல்லூரிகளை விடவும் மிக நுண்மையான கட்டமைப்புகளைக் கொண்டியங்குபவை. மேலும் இவை வெளித்தள்ளும் மாணவ சமூகம் மேட்டுக்குடி கத்தோலிக்க வெள்ளாள சமூகத்தின் பிரதிகளாகவே பெரும்பாலும் அமைந்து விடுவர்.

இவை இந்துக்கல்லூரிகளைப் போலல்லாது சைவ சமயத்தைப் பேரளவிலாவது கற்பிக்கின்றன. சந்தனப் பொட்டு திருநீறு அணிந்து செல்லும் மாணவர்கள் முன்பெல்லாம் தண்டிக்கப் பட்டார்கள். 90களின் நடுப்பக்தியில் நிலவரங்கள் மாறி வெளிப்படையான தண்டனை நீக்கப் பட்டது. நுண்ணிய செயற்பாடுகள் மூலம் 'சந்தனப் பொட்டு மாணவன்' புறமொதுக்கலை உணரும் படி செய்யப் படுவான். யாழ்ப்பாணக் கல்லூரி பற்றிக்ஸ், திருக்குடும்பக் கன்னியர்மடம், சென்.ஜோன்ஸ், அன்னபிற பாடசாலைகளில் இதுதான் நிலமை.

நன்கொடையாளர்களைத் திருப்திப் படுத்தும் ஓர் உத்தியாகவும் இந்த semi-secular நிலைப்பாடு கடைப்பிடிக்கப் படுகிறது. இதற்குச் சிறந்த உதாரணம் பொஸ்கோ ஆரம்பப் பாடசாலை. பொஸ்கோவிற்கு முன்புறமுள்ள பிள்ளையார் கோவிலில் நவராத்திரி காலப் பிரார்த்தனைகளுக்கு சைவப் பிள்ளைகளை அழைத்துச் செல்கிறார்கள்.

சென்.ஜோன்ஸ், சுண்டுக்குளி, போன்றவை தலித்துகளுக்கான கல்விக்கூடங்கள் அல்ல. கத்தோலிக்க வெள்ளாளர்களும் மேட்டுக்குடிக்குமான பாடசாலைகள் இவை. 90களுக்குப் பின்பு யாழ். சமூக அமைப்பில் உருவாகின்ற தலித் பணக்காரர்கள் (புலம்பெயர் உறவுகள் உதவியால்) மட்டும் விதிவிலக்காக இப்பாடசாலைகளில் அனுமதியைப் பெற்றுக் கொள்ளமுடிகிறது. இவர்கள் நிர்வாகத்துக்குப் பெரும் தலையிடியாக இருப்பதில்லை. தலித் பணக்காரர்கள் மிக விரைவாகவே தம்மை நவவேளாளகுடிகளாய் வடிவமைத்துக் கொண்டுவிடுவதால் இப்பாடசாலைகளின் புனிதமிக்க நளினமிக்க இருப்பு பேணப்படுகிறது. புகுமுக வகுப்புகளில் உள்ளீர்க்கப்படும் மாணவர்களிடமிருந்து 75000/= வரை நன்கொடையாக வசூலிக்கப்படுகிறது. தவணைக்குத் தவணை அறவிடப்படும் கட்டணமும் சராசரிக்கு மிக அதிகமானது. இத்தனைக்கும் மாணவர்களுக்கு புத்தகங்கள் சீருடை பாடசாலையின் அடிப்படை தேவைகள் அனைத்தையும் அரசு கவனிக்கிறது. மேலதிக உட்கட்டமைப்பு வசதிகளை பெரிதும் OBA க்கள் பொறுப்பேற்கிற நிலையில் நன்கொடையாகப் பெறப்படும் நிதிகளில் பெரும்பங்கு திருச்சபையின் சமயப் பரப்பு நிகழ்ச்சித்திட்டங்களுக்கே செல்கிறது.

இந்த பாடசாலைகள் மிக உறுதியான ஆனால் இலகுவில் கண்ணுக்குப் புலப்படாத பிரச்சாரக்கட்டமைப்பு ஒன்றை சமூகத்தினுள் நிறுவி வைத்திருக்கின்றன. பாடசாலை பற்றிய உயர்வான் எண்ணத்தை சமூகமனதில் பதிய வைப்பதற்கான அனைத்து முயற்சிகளும் கனகச்சிதமாக மேற்கொள்ளப்படுகின்றன. பரப்புரைகளை நிறைப்பதற்கென்றே சிலர் தேர்ந்தெடுக்கப்பட்டு பெருந்தொகைப் பணம் அவர்களுக்காக செலவிடப்படுகிறது.
இந்த நுணுக்கமன செயன்முறை அடுக்குகள் குறித்து அறியமுடியாதளவு திறம்படச் செய்கிறார்கள். புலனாய்வுப் பத்திரிகையியல் கற்றுத் தேர்ந்தோர் கூட இந்த வலையமைப்புக்களின் துளைத்தறியமுடியா மூட்டத்தன்மையையும் சிக்கலையும் புரிந்து கொள்வதில் பல இடர்களுக்கு முகங்கொடுக்க நேரும்.


3

யாழ்ப்பாணத்து இந்துக்கல்லூரிகள் தொடர்ச்சியாகப் பண்ணிக்கொண்டிருக்கிற இந்துமயமாக்கல்/வேளாளமயமாக்கலுக்குத் தக்க சான்றாதாரங்கள் யா.இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கம் வெளியிட்டிருக்கும் நூற்றாண்டு விழா மலரில் நிறையவே கொட்டிக்கிடக்கின்றன. அவற்றிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில பின்வருமாறு:

· பக்.212 - அ.பி.மரியதாஸ் என்ற கிறிஸ்தவர் (வடிவமைக்கப் பட்ட இந்து?!) கீழ்க்கண்டவாறு எழுதுகிறார்:
'மேலைத்தேய ஆட்சியாளரின் வலைக்குள் சிக்கிய பிரதேசங்கள் ஆட்சியாளர்களைத் தொடர்ந்து வந்த பாதிரிமாரின் முயற்சியினால் பாடசாலைகள் உருவாக்கப்பட்டு ஆங்கிலக்கல்வி போதிக்கப்பட்டது. அது மட்டுமன்றி மெல்ல மெல்ல மக்கள் மத மாற்றத்துக்கு உள்ளாக்கப் பட்டனர். அரச சலுகைகள் அவர்களின் முயற்சியை இலகுவாக்கின. கீழைத்தேய மக்களின் மேலைத்தேய நாகரீக மோகம் பாதிரிமாரின் நோக்கத்தை வெற்றி பெற வைத்தன.'
'இரண்டாயிரம் ஆண்டு தொன்மை கொண்ட நம் பாரம்பரியப் பெருமை மெல்ல மெல்ல வீழ்ச்சியுறத் தொடங்கும் விபரீதம் கண்ட சில தமிழ்ச்சான்றோர் அந்ந்நிலை தடுக்க முயன்றோர்'
..'இக்கிளர்ச்சியின் வெளிப்பாடே தமிழ்ப்பாடசாலைகளின் தோற்றமெனலாம். இப்பாடசாலைகளின் தோற்றத்துக்கு நாவலர் பெருமானின் பங்களிப்பு குறிப்பிடத் தக்கதாகும்.'

*---கட்டுரையாளர்--- நாம் இங்கு கூர்ந்து கவனிக்க வேண்டிய அம்சம் மரியதாஸ் கத்தோலிக்க மதகுருமாரை 'பாதிரிமார்' எனக் குறிப்பிடப் படுவதைத் தான். இந்துக்கள் தான் கத்தோலிக்க மதகுருக்களை பாதிரியென அழைப்பது வழக்கம். மற்றபடிக்கு வெறியிலிருக்கும் அதிருப்தியடைந்த மீனவர்கள் இவ்வாறு விளித்துத் திட்டுவது வழக்கம். பெரும்பாலும் 'மதகுருமார்' 'மதத்தலைவர்கள்' 'சுவாமி' 'பங்குத்தந்தை' போன்ற சொற்பிரயோகங்களே அச்சு ஊடகங்களில் பயன்படுத்தப்படுவது வழக்கம்.
மேலும் மரியதாஸ் ஓர் வரலாற்றுண்மையைக் கவனிக்க விரும்பவில்லை. கத்தோலிக்க மதப் பரவலும் விளிம்புகளின் மட்டுப்படுத்தப்பட்ட விடுதலையும் உடனிகழ்வுகளாயிருந்த உண்மையை அவர் லாவகமாக மறைத்து இந்து வெள்ளாளனுக்கு உவப்பான உண்மையைக் கட்டமைக்கிறார்.
'நாவலர் பிரான்' பற்றிய கட்டுடைப்பு ஆய்வுகளை மரியதாஸ் அறிந்திருக்காவிடினும் கூட நாவலர் பற்றி யாழ்ப்பாணத்தில் நிலவிவரும் சுவாரசியமான வாய்மொழிக்கதைகளைக் கூடவா அறிந்து கதைக்கமுடியாமல் போயிருக்கிறது? இதைக் கூட மரியதாஸின் தெரிவுக்கானது என நாம் விட்டுவிடலாம். மேலும் மரியதாஸ் ஓர் இந்துவைப் போல வரலாற்றுண்மைகளைத் திசைதிருப்புவதும் அவரது தெரிவுக்கானதே. நமது கேள்வி என்னவெனில் அவரது இத்தகைய தெரிவுகளை மேற்கொள்ளும் படியாக அவரது மனத்தை வடிவமைத்தது எது என்பது தான்.---

· பக்.216 - சொல்லின் செல்வர் இரா.செல்வவடிவேல் இவ்வாறு எழுதுகிறார்:
'யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி பெரும் அறிஞர்களையும், கல்விமான்களையும், ஆன்மீகவாதிகளையும் உருவாக்கிய பெரும் கோவில் ஆகும்'
'காத்தார் சமூகத் தொண்டன். புகழுக்காக! விளம்பரத்துக்காக! சமூகத்திற்குள் நுழைந்தவர் அல்லர்! உண்மைக் கம்யூனிஸ்ட் இவர் இந்துக் கல்லூரியை நடாத்துவாரா என..'

*---கட்டுரையாளர்---செஞ்சொற்சொல்வருக்குக் கூற எம்மிடம் ஒன்றுமில்லை. வாசகர்கள் அவரது கூற்றுக்களுடன் சேர்த்து வாசிக்க வேண்டிய ஓர் பிற்குறிப்பு இது : ஆணாதிக்க, இந்துத்துவ, உயர்குடியாதிக்க மலத்தை தன் வாயாலேயே கழித்துவரும் கம்பவாரிதிகளையும் அசட்டுத்தனமாக கோவில் கோவிலாய் ஏறி கத்திக் கொண்டிருக்கும் சொல்லின் செல்வர்களையும் உருவாக்கிய அற்புத உன்னத கோவில் இந்த இந்துக்கல்லூரி.

· பக்.223 - செஞ்சொற்செல்வர் ஆறுதிருமுகனார் உரைப்பது யாதெனில்:
'திரு.யோசேப் மரவேலை பொறிமுறை வரைதல் கற்பித்தவர் ஒரு கிறிஸ்தவர் என்றாலும் பிரார்த்தனைக் கூட்டத்துக்குத் தவறார். திரு சந்தியாபிள்ளை, திரு.மரியதாஸ் இவர்கள் கிறிஸ்தவ ஆசிரியர்கள். ஆனால் கல்லூரியின் பிரார்த்தனைக் கூட்டத்தில் எம்மை நெறிப்படுத்துவதில் முதன்மை வகிப்பர். இந்துக்கல்லூரி ஒரு பெரிய குடுமபம்.'

*---கட்டுரையாளர்---இக்கட்டுரையில் குறிப்பிடப்படும் இந்து மயமாக்கலுக்கான உதாரணம்.

· பக்.253 - சமீப காலமாக இலக்கியவாதியாக அறியப்பட்டுவரும் த.ஜெயசீலன் (கைகளுக்குள் சிக்காத காற்று - அரச விருதொன்றைப் பெற்றது, வார்த்தைகளை இடைனடுவில் முறித்துப் போட்டவுடன் பிரசுரிக்கத் தயாராயிருக்கும் சிறுபத்திரிக்கைகளில் இவரது கவிதைகளைக் கண்ட ஞாபகம்) எழுதிய கவிதையிலிருந்து:
'சந்தனப் பொட்டுப்பள்ளி
என்றவர் வாயடைக்க
விந்தை விஞ்ஞானம், நூறு
விளையாட்டு, கலைகள், கல்வி
என்றெந்தத் துறை என்றாலும்
"இந்துவே முதலில் இன்று"!
சந்தது சைவ மேன்மை
காக்குது.. தளராதிங்கு!'

*---கட்டுரையாளர்---ஜெயசீலன் நம்மையெல்லாம் பார்த்து அவரது கவிதையின் இறுதிப்பகுதி மூலம் ஒன்று கேட்கிறார்: 'நாம் இந்துமைந்தர் என்னும் நட்புக்கெது ஈடாகும்?' என்ன சொல்லலாம் தோழர்களே? தயவு செய்து ஒன்றும் கூறாதிருப்போம். நிச்சயமாய் நாம் அவருக்கு ஈடு கிடையாது தான்.


3

பாடசாலைகள் விடயம் சமூக அமைவாக்கத்தில் செலுத்தும் செல்வாக்கு பெரிதுபண்ணப்பட வேண்டிய விடயம் கிடையாது என்று வாதிடுபவர்களுடன் குஸ்திபோடும் எண்ணம் எனக்கில்லை. பாடசாலைகளின் சமூகவடிவமைப்புச் சக்தியை விளங்கிக் கொள்ள நான் இக்கட்டுரைக்குச் சற்றும் பொருத்தமற்ற விடுதலைப் போராட்டத்தை நோக்கிச் செல்ல வேண்டும்.
யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி பேரினவாத சக்திகளுக்கும் அதன் பிரதிநிதிகளுக்கும் ஒரு பெரும் தலையிடியாகவே தொடர்ந்தும் இருந்து வந்திருக்கிறது. எதிர்ப்பின் வலுமிக்க சக்தியாக அது இருந்து வருவதில் சந்தேகமில்லை. தமிழ்த்தேசியத்துக்கு அளப்பரிய பங்களிப்புச் செய்த கல்லூரி என்கிறார் இ.விஸ்வநாதன் (பக்.18-19, நூற்றாண்டுவிழா மலர்) நூற்றாண்டுவிழா மலரில் கல்லூரியன் வரலாற்றை எழுதுகிற பேரா.ச.சத்தியசீலன் குறிப்பிடுகிறார்:
"தமிழீழ சுதந்திரப் போராட்டம் முளைவிட்ட காலத்தில் இருந்து யாழ் இந்துவின் மாணவ மணிகள் தங்களையும் இப்போராட்டத்தில் குறிப்பிடத்தக்க அளவிலே இணைத்துக் கொண்டனர். இவ் விடுதலைப் போராட்டத்தில் முதல் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட பொன்னுத்துரை சிவகுமாரன், உலகே அதிசயிக்கத் தக்க வகையில் தன்னுயிரை தமிழினத்துக்காக அர்ப்பணித்த தியாகி திலீபன் (இராசையா பார்த்தீபன்) தளபதி இராதா எனப் பலர் இந்த வரிசையிலே திரள்வர்."

தமிழீழ விடுதலைக்கென பல மாணவர்களைத் தளபதிகளாகவும் உயர்பீடங்களிலிருப்போராகவும் உருவாக்கிக்கொடுத்த யாழ்.இந்துக்கல்லூரியின் நூற்றாண்டு விழா மலரின் பக்கநிரப்பிகளாகத் தரப்பட்டிருக்கும் 'பொன் மொழி'களில் சிலவற்றின் பட்டியல் இது. (தமிழீழத்துக்குப் பொருத்தமான குடிமக்களை வடிவமைப்பதற்கான ஒழுங்கு விதிகளாகவும் இவற்றை வாசிக்க முடியும் என்பது கூடுதல் தகவல்.) அவர்கள் களங்களிலும் கோட்பாடுகளிலும் எட்டிய வெற்றியின் பின் யாழ்.இந்துவின் பங்களிப்பும் உள்ளது என்பது போலவே கறுப்புப் பக்கங்களுக்கும் யாழ் இந்துவும் காரணமாயிருக்கலாம் என்பதற்கான சான்றுகள் இதோ:

· நிலமைக்குத் தக்கபடி நடந்துகொள்
· உயரவேண்டுமானால் பணிவு வேண்டும்
· நாட்டுப்பற்றை விட அதிகமான அன்பு வேறொன்றில்லை
· இன்னுயிர் நீர்ப்பினும் நம் தமிழ் காப்போம்
· முதலில் கீழ்ப்படிதற்குக் கற்றுக்கொள், பிறகு கட்டளையிடும் பதவி உனக்குத் தானாகவே வந்து சேரும்
· நீ எதைச்செய்தாலும் அதன் பொருட்டு உனது மனம், இதயம், ஆன்மா முழுவதையும் அர்ப்பணித்துவிடு.
· எல்லோரிடத்திலும் எல்லா விஷயங்களையும், அவர்களுக்கு சம்பந்தம் உண்டோ இல்லையோ, சொல்லிக்கொண்டிருக்காதீர்கள்.
· அளவுக்கதிகமாய், தேவைக்கதிகமாய் ஆசைப்படாதீர்கள்
· கேள்விப்படுகிற எல்லா விஷயங்களையும் நம்பிவிடாதீர்கள், அற்ப விஷயங்களைப் பெரிதுபடுத்துகிறார்கள்.
· மன அமைதி வேண்டுமானால் பிறரிடம் குற்றம் காணாதே.
· சுடர்விடவேண்டுமானால் சூடுபட வேண்டும்.



***



தரவு தரு பிரதி : 1905-2005 நூற்றாண்டு மலர்
யாழ். இந்துக் கல்லூரி
பழைய மாணவர் சங்கம்.

1 comment:

ஃபஹீமாஜஹான் said...

"முஸ்லிம் சுகைராக் கல்லூரிகளிலும்"
என்று குறிப்பிட்டது (ZAHIRA COLLEGE)ஸஹிரா கல்லூரிகளையா?
ஃபஹீமாஜஹான்